ரியல் எஸ்டேட் தொழில் மேற்கொண்டுவரும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் இன்று அதிகாலையில் தொடங்கி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை, ஆழ்வார்பேட்டை, திருச்சி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல் கர்நாடகா மற்றும் தெலங்கானாவிலும் உள்ள ஜி-ஸ்கொயர் நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் அதிக அளவு நிலங்களைக் கையகப்படுத்தியதாகவும், குறைந்த காலக்கட்டத்தில் அதிக வருமானம் ஈடுட்டியதாகவும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் மீதான புகாரின் அடிப்படையில் இந்த வருமான வரிச் சோதனை நடைபெற்று வருதாக தெரிகிறது. குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் இந்த நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், இந்நிறுவனத்துடன் திமுகவின் முக்கியப் பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்தப் பின்னணியில் ஜி-ஸ்கொயர் நிறுவனத்தின் அலுவலகங்கள், அந்நிறுவன நிர்வாகிகளின் இடங்களில் அதிகாலை தொடங்கி வருமான வரித் துறையினரின் சோதனை தீவிரமாக நடந்து வருவது கவனிக்கத்தக்கது.
இதனிடையே, தங்கள் நிறுவனம் மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டுகளால் பல ஆண்டு உழைப்பில் பெறப்பட்ட தமது வாடிக்கையாளர்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளதாகவும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தங்களது நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.38,000 கோடி என அண்ணாமலை வெளியிட்ட தகவல் தவறு என்றும், தங்களது கட்டுமானத் திட்டங்கள் பலவும் பிற நிறுவனங்களின் கூட்டு முயற்சியோடு செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜி-ஸ்கொயர் தெரிவித்துள்ளது.
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் அமைந்துள்ள ஜி-ஸ்கொயர் அலுவலகத்தில் ஒரு பெண் அதிகாரி உட்பட நான்கு வருமான வரித் துறை அதிகாரிகள் அடங்கிய குழு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை – பீலமேடு, அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் சுமார் 10 ஐடி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல். மஹேந்திரா பம்ப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மஹேந்திரா ராமதாஸின் கோவை – புலியக்குளம் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
இதேபோல் செட்டு நாடு குழும நிறுவன அலுவலகங்கள் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. செட்டி நாடு குழும நிறுவன அலுவலகங்களிலும் அதன் தொடர்புடைய இடங்களிலும் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை மற்றும் வேறு சில இடங்களிலும் சோதனை நடைபெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2020ஆம் ஆண்டு செட்டிநாடு குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அப்போது அந்நிறுவனம் ரூ.700 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் ரூ.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாடுகளிலும் கணக்கில் காட்டாத ரூ.110 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று அமலாக்கத்துறையினர் செட்டிநாடு குழும நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் அண்ணா சாலை, எழும்பூரில் உள்ள ருக்மிணி லட்சுமிபதி சாலை ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வரும் நிலையில் செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருவது கவனம் பெற்றுள்ளது.
திமுக சட்டமன்ற உறுப்பினர் மோகனின் மகன் கார்த்திக் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு நெருக்கமான நண்பர் கார்த்திக். அதே போல் ஜி ஸ்கொயர் உரிமையாளர் பாலாவும் சபரீசனுக்கு நெருக்கமான நண்பர். 2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் வருமான வரித்துறையினர் சபரீசன் வீட்டில் சோதனை செய்த போது கார்த்திக் வீட்டிலும் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் வீட்டில் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் வீட்டு முன் கூடிய திமுகவினர் மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். அதைத் தொடர்ந்து அங்கு அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். மத்திய அரசு பழி வாங்கும் நோக்கோடு திமுகவை குறிவைத்து இந்த சோதனையை நடத்துவதாக சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் பாஜகவுக்கும், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் தொடர்பு இருப்பதாக புகார்கள் கிளம்பிய நிலையில் அதை திசை திருப்புவதற்காக திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். இது முழுக்க முழுக்க அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என்று அங்கிருந்த திமுகவினர் கூறுகின்றனர்.