தெலுங்கானா போலீசாரை ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்று வருகிறது. தெலுங்கானாவிலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கொடி பறக்க ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சி (ஒய்எஸ்ஆர்டிபி) தொடங்கினார். அம்மாநில அரசுக்கு எதிராக நடைபயணம், போராட்டம் என படுபிசியாக இருந்து வருகிறார் ஒய்.எஸ். ஷர்மிளா. தெலுங்கானா முதல்வர் கேசிஆர் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக பல்வேறு புகார்கள ஒய்எஸ் ஷர்மிளா முன்வைத்து வருகிறார். இதனை முன்வைத்து போராட்டங்கள் நடத்தி கைதாகியும் வருகிறார். டெல்லியிலும் கூட ஒய்எஸ் ஷர்மிளா, கேசிஆருக்கு எதிராக போராட்டம் நடத்தி கைதானார்.
தெலுங்கானாவில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது தெலுங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வினாத்தாள் லீக் விவகாரம். இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் ஆஜராவதற்கு ஒய்.எஸ்.ஷர்மிளா இன்று நேரில் சென்றார். அப்போது ஷர்மிளாவை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவரது வாகனத்தை தடுத்து நிறுத்த போலீஸ் அதிகாரியை கீழே தள்ளிவிட்டார். பின் பெண் போலீசாருடன் கடுமையான வாக்குவாதம் செய்த ஷர்மிளா, ஒருகட்டத்தில் பெண் போலீஸ் ஒருவரை பளார் என கன்னத்தில் ஓங்கி அறைந்தார். பெண் போலீஸை ஒய்.எஸ்.ஷர்மிளா கன்னத்தில் அறையும் வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஷர்மிளா கைது செய்யப்பட்டார்.
இதனிடையே கைது செய்யபப்ட்ட ஷர்மிளாவை சந்திக்க அவரது தாயார் விஜயம்மா, ஜூப்ளி ஹில்ஸ் காவல்நிலையம் சென்றார். அங்கு விஜயம்மாவையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருடன் கடுமையான வாக்குவாதம் செய்தார் விஜயம்மா. போலீசாரை மிரட்டியும் பார்த்தார் விஜயம்மா. ஆனாலும் போலீசார் அவரை சூழ்ந்து கொண்டு நகரவிடாமல் தடுத்தனர். இதனால் கொந்தளித்த விஜயம்மா, பெண் போலீஸ் ஒருவரது கையை முறித்து தள்ளிவிட்டார். இதனால் அந்த பெண் போலீசுக்கும் விஜயம்மாவுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இப்போது இந்த வீடியோவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.