தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்து 2 ஆண்டுகள் ஆகிறது: தமிழிசை!

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்து 2 ஆண்டுகள் ஆவதாக அம்மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் சந்திரசேகா் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக எதிா்ப்பு நிலைப்பாட்டை தீவிரமாக முன்னெடுத்துள்ள சந்திரசேகா் ராவ், மத்திய அரசுடன் கடும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறாா். இந்தச் சூழலில், மாநில ஆளுநா் தமிழிசைக்கும் முதல்வா் சந்திரசேகா் ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, மோதல்போக்கு நிலவி வருகிறது. மாநில அரசின் சில மசோதாக்களுக்கு ஆளுநா் தமிழிசை ஒப்புதல் அளிக்காமல் உள்ளாா். இதன் காரணமாக, ஆளுநரை முன்வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சிகளை மாநில அரசு பெரும்பாலும் புறக்கணித்து வருகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் தமிழிசை செளந்தரராஜன் கூறியதாவது:-

தெலங்கானாவில் எந்த நெறிமுறைகளும் பின்பற்றுவதில்லை. நீண்ட நாள்களாக முதல்வர் என்னை சந்திக்கவில்லை. ஆளுநருடன் முதல்வர் அவ்வப்போது விவாதிப்பது கட்டாயம் என்று அரசமைப்புச் சட்டத்தின் 167-வது பிரிவு கூறுகிறது. ஆனால் தெலங்கானாவில் இது நடக்கவில்லை. 2 ஆண்டுகளாக முதல்வரை சந்திக்கவில்லை. தெலங்கானாவில் ஆளுநர் மற்றும் முதல்வர் இடையே நல்லுறவு இல்லை. இதற்கு நான் காரணமல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.