12 மணி நேர வேலை சட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் வேலை நிறுத்தம் உறுதி!

12 மணி நேர வேலை நேர சட்ட மசோதாவை திரும்ப பெறாவிட்டால் அறிவித்தபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில், வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சியும் தங்கள் தரப்பு எதிர்ப்பை பதிவு செய்தன. 12 மணி நேர வேலை மசோதாவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் அன்றைய தினம் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தன. கூட்டணி கட்சிகளே சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தது பரபரப்பை பற்ற வைத்தது.

இந்த நிலையில் பெரும் முதலாளிகள் மூலம் தொழிலாளர்கள் உழைப்பை சுரண்டும் இந்த மசோதாவை திரும்ப பெறக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகளும், தொழிற் சங்கங்களும் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். ஆனால், தமிழக அரசு இந்த மசோதாவில் இருக்கும் சலுகைகளை சுட்டிக்காட்டி மசோதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இன்று சென்னையில் இதுகுறித்து ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில், போராட்டம் குறித்து வரும் 27ம் தேதி முதல் நோட்டீஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, மே 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

12 மணி நேர வேலை சட்டம் குறித்து தமிழக அரசு அளித்துள்ள விளக்கத்தில், எந்த ஒரு தொழிற்சாலையாக இருந்தாலும், நிறுவனமாக இருந்தாலும் அங்கு பணியாற்றக்கூடிய தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இது நடைமுறைப்படுத்தப்படும். தொழிலாளர்களுக்கு விருப்பம் இல்லை என்றால், நிச்சயமாக அரசு பரிசீலனை செய்து ஆய்வு செய்து தான் நடைமுறைப்படுத்தும். வாரத்தில் 48 மணி நேரம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இன்னொன்று, எல்லா நிறுவனங்களுக்கும் இந்த சட்டத்திருத்தம் பொருந்தாது. எந்த நிறுவனம், எந்த தொழிற்சாலை விரும்புகிறதோ அந்தத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே இது பொருந்தும். 12 மணி நேரம் என வாரத்தில் நான்கு நாட்கள் வேலை செய்தால் மீதி இருக்கிற அந்த மூன்று நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனிடையே தொழிற்சாலைகள் சட்டமுன்வடிவு தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் 70க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். 12 மணி நேர வேலை மசோதா குறித்து தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் வேலு, அன்பரசன், சி.வி.கணேசன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

மசோதாவுக்கு திமுக கூட்டணி கட்சிகள், தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் 12 மணி நேர வேலை நேர மசோதாவை திரும்ப பெற வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தினர். தொமுச, சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்களும் 12 மணி நேர வேலை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து தொழிற்சங்கத்தினர் கூறிய கருத்துக்கள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர்கள் கூறினர். 2 மணிநேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு தொழிற்சங்கத்தலைவர் சௌந்தரராஜன், வேலை நேரத்தை குறைக்க வேண்டிய நேரத்தில் அதிகரிப்பது நியாயமல்ல என ஆலோசனைக்கூட்டத்தில் கூறியுள்ளோம். முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என அமைச்சர்கள் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிப்பது தவறானது. பணி நேரத்தை அதிகரிப்பது தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவது போலாகும் எனவும் சௌந்தராஜன் கூறினார்.

12 மணிநேர வேலை மசோதாவைக் கண்டித்து நாளைய தினம் ஆர்பாட்டம் நடைபெறும் எனவும் 26ஆம் தேதி தொழிற்சாலைகளில் கறுப்பு பேட்ச் அணிந்து உணவு புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் எனவும் சௌந்தரராஜன் கூறினார். மே 12ஆம் தேதி ஆர்பாட்டமும் மறியல் போராட்டமும் நடைபெறும் எனவும் சௌந்தரராஜன் தெரிவித்தார். இன்று இரவுக்குள் நல்ல முடிவு வராமல் போனால் வரும் 26 வரும் மே 12 ஆம் தேதி வரை தொடர் போராட்டங்கள் நடைபெறும் எனவும் சௌந்தரராஜன் அறிவித்தார்.