மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்ததால் பணியில் இருந்த போது படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி முறப்பநாடு கோவில்பத்து விஏஓ லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூ1 கோடி நிதி உதவியும் கருணை அடிப்படையில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவகுண்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அலுவலகத்தில் பணியில் இருந்த போது 2 நபர்கள் அரிவாளால் வெட்டி உள்ளனர். தலை, கைகளில் காயமடைந்த லூர்து பிரான்சிஸ் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி லூர்து பிரான்சிஸ் காலமானார். அவரைத் தாக்கி கொலை செய்தவர்களில் ராமசுப்பு உடனடியாக கைது செய்யப்பட்டார். மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் ராமசுப்பு, மற்றொரு நபருடன் இணைந்து லூர்து பிரான்சிஸை வெட்டினார். இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.
லூர்து பிரான்சிஸ் பொறுப்புணர்வையும் கடமை உணர்ச்சியையும் தமிழ்நாடு அரசு போற்றுகிறது; அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல், வருத்தத்தை தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். மேலும் அரசு சார்பாக லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு அரசு சார்பாக ரூ1 கோடி நிதி உதவி, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.