தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற விஏஓ லூர்து பிரான்ஸிஸ் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு பகுதியின் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர்தான் லூர்து பிரான்சிஸ். இங்குள்ள தாமிரபரணி ஆற்றில் மணல் சட்டத்திற்கு புறம்பாக அள்ளப்படுவதை பார்த்த லூர்து பிரான்சிஸ் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதனால் இவருக்கும் மணல் அள்ளும் கும்பலுக்கும் பகை உருவாக்கியுள்ளது. இப்படி இருக்கையில்தான் நேற்று (ஏப்.25) மதியம் இவர் அலுவலகத்தில் இருந்தபோது அலுவலகத்திற்குள் புகுந்த இருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் இவரை வெட்டி சாய்த்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். பின்னர் அவரை மீட்ட சக ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து சம்பவம் குறித்து விசாரித்த காவல்துறை குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்தது. இதனையடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மதுரை விமான நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தியதற்காக விஏஓ ஒருவர் மாஃபியா கும்பலால் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் மணலை கொள்ளையடிக்க பல மாஃபியா கும்பல்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே மணல் கொள்ளையில் ஈடுபடுவர்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதை முதலமைச்சர் செய்ய வேண்டும். இந்த மாஃபியாக்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும். லூர்து பிரான்சிஸ் படுகொலையை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில் இது நமக்கு வெளியில் தெரிந்த செய்தி. ஆனால் வெளியில் தெரியாமல் பல விஷயங்கள் நடக்கிறது.
நமது மாநிலம் பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற சூழலுக்கு போய்விடக்கூடாது. ஏனெனில் அங்குதான் இதுபோன்று கொலைகள் எல்லாம் நடக்கும். மத்தியப் பிரதேசத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளே மணல் கொள்ளையை தடுக்க முற்பட்டபோது படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். எனவே தமிழ்நாட்டில் இதுபோன்ற சூழல் உருவாகிவிடக்கூடாது. முதலில் இருக்கும் மணல் குவாரிகளை முதலில் மூடுங்கள். மணல் என்பது இயற்கை கொடுத்த வரம் நமக்கு. எனவே இதனை பாதுகாக்க வேண்டியதும் நம்முடைய கடமைதான்.
ஏற்கெனவே நம்முடைய வளங்கள் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது. இது இல்லாமல் திருட்டுத்தனமாக மணல் கொள்ளையும் நடக்கிறது. இதற்கு எல்லாக் கட்சியும் ஆதரவுதான். எனவே இதனை ஆட்சியாளர்கள் ஒழிக்க வேண்டும். அரசுக்கு தெரியாமலும், காவல் துறைக்கு தெரியாமலும் எதுவும் இங்கு நடக்காது. எனவே அரசு நினைத்தால் இவற்றை ஒரே நாளில் ஒழித்துவிட முடியும். இதனை அரசு உடனடியாக செய்ய வேண்டும். ஏனெனில் காலநிலை மாற்றம் நமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. எனவே இதிலிருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முதலமைச்சர் இதனை தலைமையேற்று நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.