சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!

சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான தொலைபேசி உரையாடல் அர்த்தம் நிறைந்ததாக இருந்தது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த மார்ச் மாதம் ரஷ்யா சென்றார். தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற புதின் – ஜி ஜின்பிங் சந்திப்பு, சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இந்த சந்திப்பின் இறுதியில், கடந்த 100 வருடங்களில் இல்லாத மாற்றத்தை நாம் செய்ய இருக்கிறோம் என்று ஜி ஜின்பிங் தெரிவித்தார். ஜி ஜின்பிங்-கின் மாஸ்கோ பயணத்தைத் தொடர்ந்து, அவருடன் தொலைபேசியில் உரையாடுவதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்தார். இதையடுத்து, இருவருக்கும் இடையே இந்த தொலைபேசி உரையாடல் நிகழ்ந்துள்ளது.

இந்த தொலைபேசி உரையாடல் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இது குறித்து கருத்து தெரிவித்த ஜெலன்ஸ்கி, “சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான தொலைபேசி உரையாடல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருந்தது. மிக நீண்ட இந்த உரையாடல் அர்த்தம் நிறைந்ததாகவும் இருந்தது. இந்த தொலைபேசி அழைப்பும், சீனாவுக்கான உக்ரைனின் தூதர் நியமனமும் இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு சக்திவாய்ந்த உத்வேகத்தை அளிக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஜெலன்ஸ்கி உடனான உரையாடல் குறித்து சீனா தரப்பில், “உக்ரைன் அதிபர் விடுத்த அழைப்பின் பேரில் இந்த தொலைபேசி உரையாடல் நிகழ்ந்தது. பொறுப்புமிக்க நாடாக சீனா, இந்தப் போரை வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது. உக்ரைன் நெருக்கடியில், சீனா எப்போதும் அமைதியின் பக்கம் நிற்கிறது. பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியை மேம்படுத்துவதே சீனாவின் முக்கிய நிலைப்பாடு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.