ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 6 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைத்தது. அதற்கு அவர் ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் சட்டமானது. இந்த சட்டத்திற்கு எதிராக ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வழக்கு தொடந்திருந்தன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜரானார். வழக்கு விசாரணையில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர். அதில், தினசரி மில்லியன் கணக்கில் வர்த்தகம் செய்து வருகிறோம். எனவே தடை சட்டத்தால் நாங்கள் முழுமையாக பாதிக்கப்படுவோம். தொழிலை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்று குறிப்பிட்டனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழக அரசு பதில் கிடைத்த பிறகே இடைக்கால உத்தரவு பற்றி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். தமிழக அரசு முன்வைத்த வாதத்தில், பொதுப் பட்டியலில் இருப்பதால் தடை சட்டம் இயற்ற மாநில அரசுக்கு உத்தரவு இருக்கிறது. எனவே ஆன்லைன் நிறுவனங்கள் முன்வைக்கும் கோரிக்கையை ஏற்கக் கூடாது என்று கூறப்பட்டது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் உத்தரவில், சூதாட்டத்தால் ஏற்படும் மரணங்கள், குடும்பங்கள் வறுமையில் வாடுவதை தடுக்க ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான சட்டத்தை தமிழக அரசு இயற்றுவதில் என்ன தவறு? மக்களை காக்கவே சட்டம் இயற்றியுள்ளதாக அரசு கூறுகிறது. ரம்மியால் ஏற்பட்ட இழப்புகளால் கணவர்கள் பணத்தை வீணடிப்பதாக அவர்களின் மனைவிகள் கண்ணீர் வடிக்கிறார்களே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழகத்தில் லாட்டரி, குதிரை பந்தயம் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு 6 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை வரும் ஜூன் 2வது வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.