2-வது மன்னிப்பு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய துக்ளக் குருமூர்த்தி மறுப்பு!

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த முரளிதர் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கில் துக்ளக் குருமூர்த்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி 2-வது பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.

2018-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி முரளிதர் குறித்து டுவிட்டர் பக்கத்தில் துக்ளக் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்திருந்த கருத்துகள் சர்ச்சையாகின. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்ற பார் அசோசியன், துக்ளக் குருமூர்த்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கில் துக்ளக் குருமூர்த்தி ஏற்கனவே மன்னிப்பு கேட்டிருக்கிறார். அவர் தமது பதிவையும் நீக்கி இருந்தார். இது தொடர்பாக ஏற்கனவே பிரமாணப் பத்திரத்தையும் குருமூர்த்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கு விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போதும் நீதிபதி தல்வந்த்சிங், துக்ளக் குருமூர்த்தி இரு வரியில் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டு புதியதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் பிரச்சனை முடிந்துவிடும் என வலியுறுத்தினர். ஆனால் துக்ளக் குருமூர்த்தி தரப்பிலோ, மன்னிப்பு கேட்டு பதிவுகளும் நீக்கப்பட்டுவிட்டன; இது தொடர்பாக ஏற்கனவே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துவிட்டோம்; புதியதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை ஜூன் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.