ரஷ்யாவை எதிா்த்துப் போரிடுவதற்காக உக்ரைனுக்கு 1,550 கவச வாகனங்கள், 230 பீரங்கிகளை நேட்டோ உறுப்பு நாடுகள் அனுப்பியுள்ளன.
இது குறித்து நேட்டோ அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் நேற்று வியாழக்கிழமை கூறியதாவது:-
ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆயுத தளவாடங்களை வழங்கி உதவுவதாக நேட்டோ உறுப்பு நாடுகள் வாக்குறுதி அளித்திருந்தன. அந்த வாக்குறுதில் கூறப்பட்டிருந்த 98 சதவீத தளவாடங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுவிட்டன. அந்த நாட்டுக்கு இதுவரை 1,550 கவச வாகனங்கள், 230 பீரங்கிகளை நேட்டோ உறுப்பு நாடுகள் அனுப்பியுள்ளன. இது மட்டுமின்றி, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் ராணுவ வீரா்களுக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் பயிற்சி அளித்துள்ளன. இந்த உதவிகள் மூலம் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட தங்கள் நாட்டுப் பகுதிகளை மீட்கும் நடவடிக்கைகளில் உக்ரைனுக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்றாா் அவா்.
தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால், அது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷ்யா கூறி வருகிறது. அதனையும் மீறி நேட்டோ அமைப்பில் இணைய ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது. அதையடுத்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் அமெரிக்காவும், பிற நேட்டோ உறுப்பு நாடுகளும் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. மேலும், உக்ரைனுக்கு சக்திவாய்ந்த பீரங்கிகள், எறிகணைகள் உள்ளிட்ட ஆயுத தளவாடங்களை நேட்டோ உறுப்பு நாடுகள் அனுப்பி வருகின்றன.
இதன் மூலம் உக்ரைன் போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் நேரடியாகப் பங்கேற்பதாகவும், இது உக்ரைன் போரை நேட்டோவுக்கும் தங்களுக்கும் இடையிலான, அணு ஆயுத மோதல் அபாயம் நிறைந்த போராக விரிவுபடுத்தும் என்று ரஷ்யா எச்சரித்து வருகிறது. மேலும், உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளிப்பது இந்தப் போருக்கு தீா்வை ஏற்படுத்தாது; அதற்குப் பதிலாக கூடுதல் இழப்பைத்தான் அதிகரிக்கும் என்று ரஷ்யா கூறி வருகிறது. அத்துடன், கடைசி உக்ரைன் வீரா் உயிரிழக்கும் வரை அந்த நாட்டுக்கு ஆயுதம் அனுப்பும் கொள்கையை மேற்கத்திய நாடுகள் கடைப்பிடிப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டி வருகிறது.
இந்தச் சூழலில், உக்ரைனுக்கு 1,550 கவச வாகனங்கள், 230 பீரங்கிகளை தங்களது அமைப்பின் உறுப்பு நாடுகள் அனுப்பியுள்ளதாக நேட்டோ பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் கூறியுள்ளாா்.