லாகூரில் காலிஸ்தான் பயங்கரவாதி பரம்ஜித் சிங் பஞ்ச்வாா் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் லாகூரில் தனது இல்லம் அருகேநடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த காலிஸ்தான் பயங்கரவாதி பரம்ஜித் சிங் பஞ்ச்வாா்(63) அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

காலிஸ்தான் கமாண்டோ படை(கேசிஎஃப்) பயங்கரவாத அமைப்பில் கடந்த 1986-ஆம் ஆண்டு இணைந்த பரம்ஜித் சிங் பஞ்ச்வாா், அடுத்த 3 ஆண்டுகளில் அந்த அமைப்பின் துணைத் தலைவராகவும், 1989-ஆம் ஆண்டு தலைவராகவும் ஆனாா். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வந்த பஞ்ச்வாா், கடந்த 1995-96-ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றாா்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத் தலைநகரான லாகூரில் வசித்து வந்த பரம்ஜித், ஜௌகா் நகா் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகப் பூங்காவில் தனது பாதுகாவலருடன் நேற்று சனிக்கிழமை காலை 6 மணியளவில் நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தாா். அப்போது, அவரை இடைமறிந்த அடையாளம் தெரியாத நபா் பஞ்ச்வாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். பின்னா், அந்த மா்ம நபா் பூங்காவின் வெளியே காத்திருந்த மற்றொரு நபருடன் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்த தப்பியதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இத்தாக்குதலில் பஞ்ச்வாரின் பாதுகாவலரும் பலத்த காயமடைந்தாா். இருவரையும் மீட்ட போலீஸாா், அருகிலுள்ள மருத்துவமனையில் அவா்களை அனுமதித்தனா். பஞ்ச்வாரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். அவரது பாதுகாவலரும் சிகிச்சைப் பலனின்றி பிற்பகலில் உயிரிழந்தாா்.

சம்பவம் இடம் முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, ராணுவ உளவுப்பிரிவு, பயங்கரவாத தடுப்புப் பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் விசாரணையைத் தொடங்கியுள்ளன. இந்தக் கொலையை நடத்த கடந்த ஒரு வாரமாக கொலையாளிகள் திட்டமிட்டதாகத் தெரிய வந்துள்ளது. கொலையாளிகளைக் கண்டறிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் லாகூா் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.