சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டை வாட்ஸ்அப் செயலி மூலம் எளிமையாக எடுக்கும் வசதியை மெட்ரோ நிர்வாகம் இன்று அறிமுகம் செய்யவுள்ளது.
சென்னையில் அலுவலகம் செல்வோர், கல்லூரி மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் என நாளொன்றுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். தொடர்ந்து, மெட்ரோவில் பயணிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. பயணிகளை ஈர்க்கும் வகையில் பயணிகள் அட்டை திட்டம் மூலம் டிக்கெட் பெற்றால் 20 சதவிகிதம் சலுகை, ரூ.2,500-ல் மாதப் பயணம், 20-க்கும் மேற்பட்டோர் பயணித்தால் குரூப் டிக்கெட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிமுகம் செய்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பெறும் வசதியை சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று அறிமுகம் செய்யவுள்ளனர். வீட்டிலோ அல்லது அலுவலகத்தில் இருந்தோ கிளம்பும்போது மெட்ரோ நிர்வாகம் கொடுக்கவுள்ள போன் நம்பருக்கு புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை அனுப்பி, யுபிஐ மூலம் கட்டணத்தை செலுத்தி டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு வரும் ‘கியூஆர் கோடை’ பயணித்தின்போது ஸ்கேன் செய்து பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.