முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: சீராய்வு மனு தள்ளுபடி!

பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பின. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. குறிப்பாக 50 சதவீத இட ஒதுக்கீடு முறை என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு எதிராக பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறை இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பளித்தது. அதில், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பெலா திரிவேதி, பர்திவாலா ஆகியோர் 10% இட ஒதுக்கீடு செல்லும் என்றும் தலைமை நீதிபதி யுயு லலித், நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் செல்லாது என அறிவித்தனர்.மாறுபட்ட தீர்ப்பளிக்கப்பட்டாலும் 5ல் 3 பேர் செல்லும் எனக் கூறியதால் சட்டம் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மறு சீராய்வு செய்யக்கோரி சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை எனவும் மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மூலம் பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு வழங்கப்படும் 10 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் செல்லுபடியாகும் என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.