அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரரிக்க அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!

தமிழகத்தில் முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக புகாருக்கு உள்ளான செந்தில் பாலாஜி தொடர்புடைய மேல்முறையீடு வழக்கில், அமலாக்கத் துறையின் விசாரணைக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

2014-ஆம் ஆண்டின்போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகாருக்கு உள்ளான அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவரும் தற்போதைய மின்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் 30.7.2021-இல் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக தர்மராஜ் உள்ளிட்டோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி அளித்த தீர்ப்பில், “உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நிலைக்கத்தக்கதல்ல. மேல்முறையீட்டு மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன. உயர்நீதிமன்றத்தின் சம்பந்தப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’ எனக் கூறப்பட்டிருந்தது.

இதனிடையே சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை கோணத்தில் விசாரிக்க செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அமலாக்கத் துறையின் விசாரணைக்குத் தடை விதித்தது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ண முராரி, வெ.ராமசுப்பிரமணியன் ஆடங்கிய அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது. இந்த விவகாரத்தில் புதிதாக விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன. அந்த மூல வழக்கு விசாரணை தொடர்புடைய சென்னை உயர்நீதிமன்றத்தின் 31.10.2022-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட குறிப்பிட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. புதிய விசாரணைக்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கில் விசாரணை அதிகாரி ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவின் கீழ் உள்ள குற்றங்கள் உள்பட அனைத்து வழக்குகளிலும் மேலும் விசாரணையைத் தொடர்வார். இந்த விஷயத்தில் புலன்விசாரணை அதிகாரி தரப்பில் ஏதும் விடுபட்டால், எதிர்காலத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு நியமிப்பது குறித்து நீதிமன்றம் பரிசீலனை செய்ய வழியேற்படுத்தும்.

அமலாக்கத் துறை விசாரணை விவகாரத்தில், உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் அமர்வு கடந்த ஆண்டு செப்டம்பரில் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன. நீதிமன்றத்தின் அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அமலாக்கத் துறை மூலம் விசாரணையைத் தொடங்குவதை எதிர்த்து தாக்கலான மூன்று ரிட் மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மேலும், உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் அமர்வு 30.3.2022-இல் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

விசாரணையை முடிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் விவகாரத்தில் 27.11.2019 மற்றும் 1.11.2021-இல் பிறப்பிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கலான மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது. விசாரணை அதிகாரி மேலும் விசாரணை நடத்தி, இரு மாதங்களில் கூடுதல் அல்லது இறுதி அறிக்கையை தாக்கல் செய்வார். நீதிமன்ற அவமதிப்பு மனுக்களும், இடையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.