தமிழக அரசைக் கண்டித்து கையெழுத்து இயக்கம்: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த கோரி தமாகாவின் இளைஞரணியின் சார்பில் வருகிற 20-ம் தேதி கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாரயம் குடித்ததால் நேர்ந்த உயிரிழப்புகள், தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்கள் எளிதாக, அனைத்து இடங்களிலும் கிடைக்கின்றன. இதனால் இளைஞர்களின் வாழ்க்கைகேள்விக்குறியாக உள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதியில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, 12 மணிநேரம் மதுக்கடைகளை திறந்து வைத்து மக்களை குடிகாரர்களாக ஆக்கி வருவது வேதனைக்குரியது.

தமிழகத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்களையும், இளைஞர்களையும் ஒருபுறம் டாஸ்மாக் மூலமும், மறுபுறம் கள்ளச் சாராயத்தின் மூலமும் அழிவுப்பாதைக்கு அழைத்து செல்லும் நிலையை கண்டித்தும், தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த கோரியும் தமாகாவின் இளைஞரணியின் சார்பில் வருகிற 20-ம் தேதி, சென்னை, தியாகராய நகர் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள பெருந்தலைவர் இல்லத்தில், மாபெரும் கையெழுத்து இயக்கம் எனது தலைமையில் நடைபெறும். மேலும் தமிழகம் முழுவதும் தமாகா இளைஞரணியின் சார்பில், அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மே 22-ம் தேதி கையெழுத்து பெறப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்படுகிறது. நிகழ்வில் தமாகா மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள், துணை அமைப்பு தலைவர்கள், இளைஞரணியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.