லைகாவிற்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகாவிற்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்து இருக்கிறது.

இலங்கையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சுபாஸ்கரனுக்கு சொந்தமான லைகா மொபைல் என்ற தொலைதொடர்பு நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் சினிமா தயாரிப்பில் இறங்கியது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான கத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லைகா புரெடக்சன்ஸ், கடந்த சுமார் 10 ஆண்டுகளில் ஏராளமான படங்களை தயாரித்து வெளியிட்டு உள்ளது. சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2.O, மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம், தர்பார், வட சென்னை, காப்பான் தொடங்கி அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் பாகம் 2 உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்களின் படங்களை லைகா தயாரித்து வெளியிட்டு உள்ளது. தற்போது அஜித் நடிக்க இருக்கும் விடா முயற்சி திரைப்படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்கிறது. இன்னும் பல திரைப்படங்களை தன்வசம் வைத்திருக்கும் லைகா நிறுவனமே தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தயாரிக்கும் நிறுவனம் என்ற பெயரை பெற்று உள்ளது.

குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் வெற்றியை பெற்றது. உலக நாடுகளிலும் பொன்னியின் செல்வன் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தியது. அதேபோல் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படமும் வசூல் சாதனை படைத்ததாக கூறப்படுகிறது. இதன் மூலமாக லைகா நிறுவனத்திற்கு பல நூறு கோடிக்கணக்கில் வருவாய் கிடைத்ததாக வசூல் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான் லைகா நிறுவனம் மீது ஒரு புகார் சென்றிருக்கிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக எழுந்த புகார்தான் அது. இந்த புகார் தொடர்பாக நேற்று காலை லைகா நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். சென்னை தியாகராயர் நகர் விஜயராகவா சாலையில் அமைந்து இருக்கும் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. அத்துடன், சென்னை அடையாறு, காரப்பாக்கம் உட்பட லைகா நிறுவனத்துக்கு தொடர்புடைய 8 இடங்களில் துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது அது நிறைவடைந்து உள்ளது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.