திருப்பூண்டியில் அரசு மருத்துவர் அணிந்திருந்த ஹிஜாபை கழற்ற வற்புறுத்திய பாஜக மாவட்ட நிர்வாகியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தபோது பள்ளி கல்லூரிகளுக்கு மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் கைகளில் கயிறு, நெற்றியில் விபூதி போன்ற மத அடையாளங்களுடன் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் ஹிஜாப் அணிந்துக்கொண்டு கல்வி நிலையங்களுக்கு செல்வதை பாஜக தடை செய்து ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என இஸ்லாமிய அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் விமர்சனம் செய்திருந்தனர். இதை எதிர்த்து நீதிமன்றங்களையும் அவர்கள் நாடியிருந்தனர். இருப்பினும் பாஜக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.
இந்நிலையில்தான் தமிழ்நாட்டிலும் இந்த பிரச்னை தற்போது லைட்டாக தலைத்தூக்க தொடங்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் அரசு மருத்துவமனை ஒன்று அமைந்திருக்கிறது. இந்நிலையில் அங்கு வந்த பாஜக மாவட்ட நிர்வாகி புவனேஷ்வர் ராம் என்பவர் பணியிலிருந்த அரசு மருத்துவர் ஹிஜாப் அணிந்திருந்ததை பார்த்து சர்ச்சையில் ஈடுபட தொடங்கியுள்ளார். ஹிஜாபை கழற்றுமாறு கூறி மருத்துவரை பணி செய்ய விடாமல் தடுத்திருக்கிறார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் அக்கம் பக்கத்தில் தெரிய வந்த நிலையில், உடனடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, விசிக போன்ற கட்சிகள் சாலை மறியலில் ஈடுபட தொடங்கின.
இது குறித்து போராட்டம் நடத்திய கட்சியினர் கூறுகையில், “நாகப்பட்டின மாவட்டத்தில் காலங்காலமாக இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் பாஜக நிர்வாகி செயல்பட்டிருக்கிறார். இது உத்தரப் பிரதேசமோ, கர்நாடகாவோ அல்ல. இது தமிழ்நாடு. இங்கு இது போன்ற மத பிரிவினைவாத செயல்கள் எதுவும் எடுபடாது” என்று கூறியுள்ளனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பாஜக நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். இதனையடுத்து சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பாஜக நிர்வாகி புவனேஸ்வர் ராமை பிடிக்க உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைத்துள்ளனர். கர்நாடகாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஹிஜாப் அணியக்கூடாது என்று பாஜகவினர் பஞ்சாயத்தை கூட்டியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஹிஜாப் அணிந்த மருத்துவருக்கு மிரட்டல் விடுத்த சம்பவத்திற்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவர் அலுவலர்கள் சங்கம் கூறுகையில், ”இதுபோன்ற சமூக விரோத செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.