வருமான வரித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அவரது ஆதரவாளர்களால் வருமான வரித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகள், அவரின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் நடக்கும் ரெய்டுகள் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக ரெய்டு நடக்கும் இடங்களில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிராக போர்கொடி தூக்கி உள்ளனர். முக்கியமாக கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் அதிகாரிகள் சோதனையிட சென்ற போது பெண் அதிகாரியிடம் கரூர் மாநகராட்சி கவிதா கணேசன் உள்ளிட்டவர்கள் வாக்குவாதம் செய்தனர். திமுக நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து.. உன் ஐடி கார்ட் காட்டு.. நீ போய் ரெய்டு பண்ணு.. ஆனா அடிச்சதுக்கு மன்னிப்பு கேட்டுட்டு போ.. உங்க வீட்டு ஆம்பளையா இப்படித்தான் அடிப்பியா, என்று கேட்டுள்ளார் கவிதா கணேசன். இதனால் சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வருமான வரி சோதனை நடைபெறும் இடத்தில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. அங்கு சோதனை செய்ய சென்ற அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை முற்றுகையிட்ட திமுக தொண்டர்கள் அவர்களிடம் ஐடி கார்ட் கேட்டு விவாதம் செய்துள்ளனர். இதில் ஒரு அதிகாரி கோபம் அடைந்து திமுக தொண்டர்களை தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. திமுக தொண்டர்களில் ஒருவரை பெண் அதிகாரி ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு திமுக நிர்வாகிகள் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர். இந்த எதிர்ப்பு காரணமாக அதிகாரிகள் அப்பகுதியில் இருந்து புறப்பட்டனர். செந்தில் பாலாஜி வீட்டிற்கு வெளியே வருமானவரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடி திமுகவினரால் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற பெரிய ரெய்டுகளில் ஒன்றாக செந்தில் பாலாஜி வீட்டில் நடக்கும் வருமான வரித்துறை ரெய்டு பார்க்கப்படுகிறது. மொத்தம் 1000 அதிகாரிகள் இந்த ரெய்டில் களமிறக்கப்பட்டு உள்ளனர். முதலில் 40 இடங்களில் ரெய்டு நடப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 200 இடங்களில் ரெய்டு நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அவரது ஆதரவாளர்களால் வருமான வரித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு ஆதரவாக ஒரு கும்பல் ஐடி அதிகாரிகளை தாக்கி உள்ளனர். அவர்களின் வாகனங்களை திமுக குண்டர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இது போன்ற தவறான விஷயங்களில், உங்கள் கட்சி ஆட்கள் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் கட்சி ஆட்களுக்கு ஒழுங்காக சொல்லி வையுங்கள். நீங்கள் ஆட்சி நடத்துவது ஒன்றும் 60 களில் இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.