சத்யேந்தர் ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் டெல்லி திகார் சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியின் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசாங்கத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றியவர்தான் சத்யேந்திர ஜெயின். அமைச்சராக சத்யேந்தர் பணியாற்றி வந்த காலத்தில் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ இவர் மீது வழக்குப் பதிவு செய்தது. இதனை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறையும், இவர் மீதும் இவரது மனைவி உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்நிலையில் விசாரணைக்கு சத்யேந்தர் ஜெயின் ஒத்துழைக்கவில்லை என்று கூறி அமலாக்கத்துறை கடந்த மே மாதம் 30ம் தேதி இவரையும் இவரது நண்பர்கள் இரண்டு பேரையும் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தது. இவ்வாறு, இருக்கையில் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று கோரி பலமுறை சத்யேந்தர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். ஆனால் ஜாமீன் மறுக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று அவர் சிறையில் உள்ள குளியலறையில் வழுக்கி விழுந்ததாகவும் எனவே தீனதயாள் உபாத்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, தற்போது இவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் அனுமதியின்றி டெல்லியை விட்டு வெளியேற கூடாது என்றும், ஊடகங்களுக்கு அறிக்கை எதுவும் வெளியிடக்கூடாது போன்ற நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் இவருக்கு 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.