1947ல் ஆங்கிலேயர் ஆட்சியை ஒப்படைத்ததன் அடையாளமாக செங்கோல் வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மே 28-ல் நடக்கும் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காததற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதாக 19 எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், 1947ல் ஆங்கிலேயர் ஆட்சியை ஒப்படைத்ததன் அடையாளமாக செங்கோல் வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-
அப்போதைய மதராஸ் மாகாணத்தில் ஒரு மத ஸ்தாபனத்தால், மெட்ராஸ் நகரில் வடிவமைக்கப்பட்ட ஒரு கம்பீரமான செங்கோல் உண்மையில் ஆகஸ்ட் 1947ல் நேருவுக்கு வழங்கப்பட்டது. ஆனால் மவுண்ட்பேட்டன், ராஜாஜி மற்றும் நேரு ஆகியோர் இந்த செங்கோலை பிரிட்டிஷ் அதிகாரத்தை இந்தியாவுக்கு மாற்றியதற்கான அடையாளமாக விவரித்ததற்கு ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை. 1947ல் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து செங்கோல் நேருவுக்கு வழங்கப்பட்டது மட்டுமே உண்மை.
செங்கோல் இப்போது பிரதமரும் அவரது பறை அடிப்பவர்களும் தமிழகத்தில் தங்கள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள். ஒன்றிய அரசு குறிப்பிட்டதற்கு எந்த ஆவணச் சான்றும் இல்லை. தமிழ்நாட்டின் அரசியலுக்காக செங்கோலைப் பற்றிய தகவலை திரிக்கிறார்கள். உண்மையான கேள்வி என்னவெனில், புதிய பாராளுமன்றத்தை திறந்து வைக்க ஜனாதிபதி திரௌபதி முர்முவை ஏன் அனுமதிக்கவில்லை? இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் நரேந்திர மோடி பதவியேற்று இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு காங்கிரஸ் கட்சி 9 கேள்விகளை முன்வைத்துள்ளது.
1. பொருளாதாரம்: பணவீக்கமும் வேலைவாய்ப்பின்மையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருப்பது ஏன்? பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதும், ஏழைகள் மேலும் ஏழைகளாவதும் ஏன்? பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ள நிலையிலும் பொதுச் சொத்துக்களை உங்கள் நண்பர்களுக்கு விற்பனை செய்தது ஏன்?
2. விவசாயம் மற்றும் விவசாயிகள்: மூன்று “கருப்பு” விவசாய சட்டங்களை ரத்து செய்யும்போது விவசாயிகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் ஏன் மதிக்கப்படவில்லை? குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஏன் சட்டபூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்படவில்லை? கடந்த 9 ஆண்டுகளில் விவசாயிகளின் வருவாய் இரட்டிபாகாதது ஏன்?
3. ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம்: மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து எல்ஐசி-யிலும், எஸ்பிஐ வங்கியிலும் சேமித்த பணத்தை உங்கள் நண்பர் அதானி பலனடையும் நோக்கில் கொடுத்து மக்களை நெருக்கடியில் தள்ளியது ஏன்? திருடர்களை தப்பிக்க விட்டது ஏன்? பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் தலைவிரித்தாடும் நிலையில் நீங்கள் அமைதியாக இருப்பது ஏன்? இந்தியர்களை சிரமத்திற்கு உள்ளாக்குவது ஏன்?
4. சீனா மற்றும் தேச பாதுகாப்பு: கடந்த 2020ல் சீனாவுக்கு நீங்கள் நற்சான்றிதழ் கொடுத்த பிறகும் அவர்கள் இந்திய நிலப்பகுதியை ஆக்கிரமிப்பது ஏன்? சீனாவுடன் 18 பேச்சுவார்த்தைகள் நடத்த பிறகும் சீனா தனது உத்தியை ஆக்ரோஷத்துடன் கொண்டிருப்பது ஏன்?
5. சமூக நல்லிணக்கம்: தேர்தல் ஆதாயத்துக்காக வெறுப்பு அரசியலை வெளிப்படையாகப் பயன்படுத்துவது ஏன்? அச்சம் நிறைந்த சூழலை சமூகத்தில் உருவாக்குவது ஏன்?
6. சமூக நீதி: சமூக நீதியின் அடித்தளத்தை திட்டமிட்ட ரீதியில் சீர்குலைப்பது ஏன்? பெண்கள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர் தாக்கப்படும்போது அமைதியாக இருப்பது ஏன்? சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை புறக்கணிப்பது ஏன்?
7. ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி: கடந்த 9 ஆண்டுகளாக நமது அரசியல் சாசன மதிப்பீடுகளையும், ஜனநாயக அமைப்புகளையும் பலவீனப்படுத்தியது ஏன்? எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் பழிவாங்கும் அரசியலை மேற்கொள்வது ஏன்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை சீர்குலைக்க பணபலத்தை அப்பட்டமாக பயன்படுத்துவது ஏன்?
8. நலத்திட்டங்கள்: ஏழைகள், பழங்குடி மக்கள் ஆகியோருக்கான நலத்திட்ட நிதியை குறைத்தது ஏன்? கட்டுப்பாடுகளை அதிகரித்தது ஏன்?
9. கோவிட் – தவறான நிர்வாகம்: 40 லட்சம் மக்கள் கோவிட் பெருந்தொற்றால் உயிரிழந்தபோதும் அவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்காதது ஏன்? லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாத படிக்கு திடீரென லாக்டவுனை அறிவித்தது ஏன்?
இந்த 9 கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க வேண்டும் என்றும், அமைதி காக்கக் கூடாது என்றும் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 3 நாட்களில் நாட்டின் 35 மாநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் 35 பத்திரிகையாளர் சந்திப்புகள் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.