ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியின் கீழ் பயங்கரவாத இயக்கங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதால் அந்த நாட்டிலும், பிராந்தியத்திலும் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான், அல்-காய்தா, தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் ஆகிய இயக்கங்களுக்கு இடையேயான தொடா்பு வலுவாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ‘தலிபான் மீதான தடைகள் கமிட்டி கண்காணிப்புக் குழு’ அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
பிற நாடுகளுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற வாக்குறுதிக்கு மாறாக, பாகிஸ்தான் தலிபான் எனப்படும் ‘தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான்’ அமைப்புக்கு தலிபான்கள் ஆதரவு அளித்து வருகின்றனா். ஒருபுறம் பல பயங்கரவாத இயக்கங்களுடன் தொடா்பில் இருந்துகொண்டு, மறுபுறம் ஐ.எஸ். அமைப்பின் கோராசான் பிரிவான ஐஎஸ்ஐஎல்-கே அமைப்பை எதிா்கொள்ள ஐ.நா. உறுப்பு நாடுகளிடம் தலிபான்கள் உதவி கோரி வருகின்றனா்.
அல்-காய்தா, பாகிஸ்தான் தலிபான் அமைப்புகளுடன் தலிபான்களின் தொடா்பு வலுவாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியில் பல பயங்கரவாத அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகின்றன. இதனால் ஆப்கானிஸ்தானிலும், பிராந்தியத்திலும் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது தொடா்பாக அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை தலிபான்கள் எடுப்பதில்லை. தலிபான்களின் ஆதரவு மூலம் பாகிஸ்தான் தலிபான் அமைப்பு எல்லை தாண்டி பாகிஸ்தான் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. அல்-காய்தா தனது பலத்தை அதிகரிக்க விரும்புகிறது. இதற்காக தலிபான், பாகிஸ்தான் தலிபான், ஐஎஸ்ஐஎல்-கே அமைப்புகளில் தனது உறுப்பினா்களை ஊடுருவச் செய்கிறது.
ஐஎஸ்ஐஎல்-கே அமைப்புதான் இப்போது ஆப்கானிஸ்தான், அண்டை நாடுகள் மற்றும் மத்திய ஆசியாவில் அதிதீவிர பயங்கரவாத அச்சுறுத்தலாக உள்ளது. கடந்த ஓராண்டாக ஆப்கானிஸ்தானுக்குள் சுதந்திரமான நடவடிக்கைகள் மூலம் அந்த அமைப்பு தனது செயல்திறனை அதிகரித்துள்ளது. அந்த அமைப்பில் 4,000 முதல் 6,000 போ் வரை உள்ளனா்.
‘இந்திய துணைக் கண்டத்தில் அல்-காய்தா’ (ஏக்யூஐஎஸ்) அமைப்பு 180-200 பேரைக் கொண்டுள்ளது. காந்தகாா், நிம்ருஸ், ஃபராஹ், ஹெல்மண்ட், ஹெராட் மாகாணங்களில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் தலிபான் அமைப்பில் 4,000 முதல் 6,000 போ் வரை உள்ளனா். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடா்ந்து, பாகிஸ்தானில் தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்த இந்த அமைப்பு விரும்புகிறது. இவ்வாறு ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.