பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் நாளை மறுநாள் நடைபெறும் மெகா எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
கலைஞர் கோட்டம் திறப்பு விழாவிற்கு நிதிஷ்குமார் வருகை தராததால் ஸ்டாலின் பீகார் செல்வாரா என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது. இதனிடையே நிதிஷ்குமார் திருவாரூர் வராத சூழலிலும் கருணாநிதி குறித்து அவர் அனுப்பிய உரையை திருச்சி சிவா மேடையில் வாசித்தார். இதனிடையே நன்றி தெரிவித்து நம்பிக்கையுடன் புறப்படுகிறேன் என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் பீகார் பயணம் பற்றி கூறியிருப்பதாவது:-
நம்முடைய அன்பான அழைப்பை ஏற்று, பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி வருகை தந்து கலைஞர் கோட்டம் திறப்பு விழா நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்ததுடன், இந்தியாவின் ஜனநாயகத்தையும் பன்முகத்தன்மையையும் காப்பதற்கு கலைஞரின் வாழ்க்கை எப்படி துணையாக நின்று வழிகாட்டுகிறது என்பதை விளக்கினார். உடல்நலக்குறைவால் அன்பிற்குரிய பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமாரால் வர இயலாவிட்டாலும், தன் உள்ளத்து உணர்வுகளையெல்லாம் உரையாக எழுதி, இந்திய அரசியல் களத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் இன்றும் எப்படி வழிகாட்டியாகத் திகழ்கிறார் என்பதை விளக்கியிருந்தார். அதன் தமிழாக்கத்தை திருச்சி சிவா எம்.பி. உணர்வுபூர்வமாக உடன்பிறப்புகளிடம் எடுத்துரைத்தார்.
கொள்கை வலிவும் இயக்க உணர்வும் பெருகிடத் திருவாரூர் திருத்தலத்தின் நிகழ்வுகளைத் தொடர்ந்து, பாடலிபுத்திரம் என வரலாற்றில் பெயர் பெற்ற பாட்னா நகருக்குப் புறப்பட ஆயத்தமாகிவிட்டேன். கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் நான் உரையாற்றியது போல, இந்தியாவைக் காத்திட மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் இணைந்து நிற்க வேண்டிய தருணம் இது. மதவெறி கொண்ட பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காத்திடும். அதற்கான முன்னெடுப்பை பீகார் முதலமைச்சர் அன்பிற்குரிய நிதீஷ் குமார் மேற்கொண்டிருக்கிறார். ஜூன் 23-ஆம் நாள் பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில், காலமெல்லாம் மதநல்லிணக்கக் கொள்கையை வலியுறுத்திய நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் பிரதிநிதியாக நான் பங்கேற்கிறேன். இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டு உணர்வை – ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான இந்த முன்னெடுப்பு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல விளைவைத் தரும் என்ற நம்பிக்கை மிகுந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.