குரூப் 4 காலியிடங்களின் எண்ணிக்கையை 20 ஆயிரமாக உயர்த்த வேண்டும்: அன்புமணி

குரூப் 4 காலியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 20 ஆயிரமாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 24-ஆம் நாள் நடத்தப்பட்ட தொகுதி 4 தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,117 என்பதிலிருந்து 10,748 ஆக உயர்த்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்டு 15 மாதங்கள் ஆகி விட்ட நிலையில் இந்த 15 மாதங்களில் மட்டும் சுமார் 15 ஆயிரம் பணியிடங்கள் காலியாகியிருக்கக் கூடும். இந்த காலியிடங்களை நிரப்ப ஆண்டுக்கு 50,000 நான்காம் தொகுதி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நான்காம் தொகுதி பணியாளர்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 20 ஆயிரமாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் நாளை முதல் மூடப்படவிருப்பது வரவேற்கத்தக்கது. மீதமுள்ள மதுக்கடைகளையும் மூட கால அட்டவணை வெளியிட வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5329 மதுக்கடைகளில் 500 கடைகள் நாளை முதல் மூடப்படும் என்று டாஸ்மாக் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இது தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும். தமிழ்நாட்டில் படிப்படியாக முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதை நோக்கிய பயணத்தின் தொடக்கமாக இது அமைய வேண்டும்.

தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இரு மாதங்களுக்கு மேலாகியும் அந்த அறிவிப்பு செயல்படுத்தப்படாமல் இருந்து வந்தது. சட்டப்பேரவையில் அறிவித்தவாறு மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தேன். அதன் பயனாக நாளை முதல் 500 மதுக்கடைகள் மூடப்படவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மூடப்படும் மதுக்கடைகள் தவிர மீதமுள்ள 4829 மதுக்கடைகளும் படிப்படியாக மூடப்பட்டு தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். காலாண்டுக்கு 500 மதுக்கடைகள் மூடப்பட்டால், அடுத்த இரண்டரை ஆண்டுகளில் முழுமையான மதுவிலக்கு சாத்தியமாகி விடும். அதற்கேற்றவாறு உடனடியாக கால அட்டவணையை தயாரித்து வெளியிடுவதுடன், அதனடிப்படையில் மதுக்கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.