ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையம் நடத்த தலிபான் அரசு தடைவிதித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் தலிபான் அமைப்பினர் ஆட்சியைக் கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து அங்கு பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன. பெண்கள் பொதுவெளிக்கு வருவதை தடுக்கும் நடவடிக்கைகளை தலிபான் அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பெண்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பூங்கா, ஜிம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லவும் பெண்களுக்கு அனுமதி இல்லை. அரசு வேலைகளிலிருந்து பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர். பெண்கள் பொதுவெளியில் முகத்தை மறைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அழகு நிலையங்களை மூட தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ஆப்கானிஸ்தானில் துணை மற்றும் நல்லொழுக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், “காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களால் நடத்தப்படும் அனைத்து அழகு நிலையங்களும் உடனடியாக தடை செய்யப்படுகிறது. அனைவரும் எங்கள் உத்தரவைப் பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கனில் பெண்களின் நிலை குறித்து ஐநா மனித உரிமைப் பிரிவின் துணை உயர் ஆணையர் நாடா அல் நஷீப் கூறும்போது, “கடந்த 22 மாதங்களாக, ஆப்கனிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கை முடக்கப்பட்டு வருகிறது. அனைத்து தளங்களிலும் பெண்களுக்கு எதிராக தீவிர பாகுபாடு காட்டப்படுகிறது” என்றார்.