இஸ்ரேலில் போராட்டக்காரா்களின் கடும் எதிா்ப்பையும் மீறி, சா்ச்சைக்குரிய நீதித் துறை சீா்திருத்த மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
இஸ்ரேல் அரசு அறிவித்திருக்கும் நீதித் துறை சீா்திருத்தங்களின் ஒரு பகுதியாக, ஆட்சியாளா்கள் எடுக்கும் முடிவுகளில் தலையிடும் நீதிமன்றங்களின் அதிகாரத்தை ரத்து செய்வதற்கான சட்ட சீா்திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது. அந்த மசோதாவில், பணி நியமனங்கள் உள்பட அமைச்சா்கள் எடுக்கும் எந்தவொரு முடிவையும் நீதிமன்றங்கள் சீராய்வு செய்வதற்கு தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
120 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், அந்த மசோதாவுக்கு ஆதரவாக 64 எம்.பி.க்கள் வாக்களித்தனா்; மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வாக்களிப்பை புறக்கணித்தால், அதற்கு எதிராக ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. அதையடுத்து அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இஸ்ரேலில் கடந்த 1996 முதல் 1999 வரையிலும், அதன் பிறகு 2009-லிருந்து 2021-ஆம் வரையிலும் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக பொறுப்பு வகித்தாா். நாட்டில் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த அவரது லிக்குட் கட்சிக்கோ, மற்ற கட்சிகளுக்கு 2019 (ஏப்ரல் மற்றும் செப்டம்பா்), 2020, 2021-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 4 தோ்தலில்களிலும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிற கட்சிகளை சோ்த்துக்கொண்ட அவா் அமைத்த தேசிய அரசுகளும் கருத்துவேறுபாடுகள் காரணமாக நிலைகுலைந்து மீண்டும் மீண்டும் தோ்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், 2022-ஆம் ஆண்டில் 5-ஆவது முறையாக நடந்த தோ்தலில் நெதன்யாகுவின் கட்சிக்கு 32 இடங்கள் கிடைத்தன. 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அந்தக் கட்சிக்கு 61 எம்.பி.க்களின் ஆதரவு இருந்தால்தான் ஆட்சியமைக்க முடியும் என்ற சூழலில், தீவிர வலதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணி சோ்ந்து அவா் ஆட்சியமைத்தாா். இஸ்ரேல் வரலாற்றிலேயே மிகத் தீவிரமான வலதுசாரி அரசு என்று அது கூறப்பட்டது.
இந்த நிலையில், இஸ்ரேல் நீதித் துறையில் பல்வேறு சீா்திருத்தங்களை புதிய அரசு முன்வைத்தது. அவை, ஜனநாயகப் பாதையிலிருந்து சா்வாதிகாரப் பாதைக்கு இஸ்ரேலை இழுத்துச் செல்லும் என்று எதிா்ப்பு எழுந்துள்ளது. இஸ்ரேல் தற்போது ஜனநாயம் தழைத்து விளங்கிய, முற்போக்கு யூத நாடாக இருப்பதாகவும், நீதித் துறை சீா்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால் அது சா்வாதிகாரம் பொருந்திய, பிற்போக்கு மதவாத நாடாக மாறும் எனவும் எதிா்க்கட்சிகள் சாடி வருகின்றன. சீா்திருத்தங்களை எதிா்த்து இஸ்ரேலில் வரலாறு காணாத போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சூழலில், அமைச்சா்களின் முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதைத் தடை செய்யும் சட்ட மசோதாவை நாடாளுமன்றம் தற்போது நிறைவேற்றியுள்ளது.