ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், தற்போது போரில் உக்ரைனின் கை மெல்ல ஓங்கி வருகிறது. ஏற்கெனவே ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதலை நடத்திய உக்ரைன், தற்போது அந்நாட்டின் மிக முக்கியமான போர் கப்பலையும் தாக்கியுள்ளது.
நேட்டோவில் உக்ரைன் இணைவதாக அறிவித்ததையடுத்து அதன் மீது ரஷ்யா போரை தொடுத்துள்ளது. போர் தொடங்கி சுமார் 17 மாதங்கள் ஆகியுள்ளன. ஆனாலும் அதன் வீரியம் குறைந்தபாடில்லை. ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைன் உள்ளிட்ட நாடுகள், சோவியத் உடைந்த பின்னர் தனி நாடுகளாக அறிவித்துக்கொண்டன. தற்போது இந்த நாடுகளை தங்கள் வசம் கொண்டுவரும் வேலையை அமெரிக்கா ‘நேட்டோ’ அமைப்பு மூலம் முன்னெடுத்துள்ளது. எதிர்பார்த்தபடி பெரும்பாலான முன்னாள் சோவியத் நாடுகள் நேட்டோவில் இணைந்துவிட, உக்ரைனும் இதில் இணைவதாக கையெழுத்திட்டது. இங்குதான் சர்ச்சை வெடித்தது. காரணம், உக்ரைன் நேட்டோவில் இணைந்துவிட்டால் நேட்டோ படைகள் உக்ரைன் எல்லையில் நிலைநிறுத்தப்படும். இது பக்கத்து நாடான ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தல். எனவே உக்ரைன் இதில் இணைய கூடாது என்று ரஷ்யா வலியுறுத்தியது. ரஷ்யாவின் பேச்சை கேட்காத உக்ரைன் இதில் இணைவதில் உறுதியாக இருப்பதாக அறிவித்தது. எனவே ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது. இந்த போரில் தற்போது வரை சுமார் 9 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 15,779 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை செய்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி தற்போது வரை ரூ.3.44 லட்சம் கோடி மதிப்பிலான உதவிகளை அமெரிக்கா செய்துள்ளது. இன்று மேலும் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்கியுள்ளது. இது உக்ரைனை மிகவும் பலம் வாய்ந்த ராணுவ நாடாக மாற்றியிருக்கிறது. சுருக்கமாக சொல்வதெனில் இந்தியாவின் ஒட்டுமொத்த ராணுவ பட்ஜெட்டில் சுமார் 95% அளவுக்கு உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது போரின் தீவிரத்தை மேலும் மோசமாக்கியுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் தற்போது போரில் தீவிரம் காட்டி வருகிறது. அதாவது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் ட்ரோன் தாக்குதலை தொடுத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தற்போது கருங்கடலில் உள்ள ரஷ்யாவின் மிகப்பெரிய துறைமுகமான நோவோரோசிஸ் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதலை தொடுத்திருக்கிறது. இந்த துறைமுகம் முழுக்க முழுக்க ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கு தாக்குதல் நடத்தப்பட சாத்தியமே கிடையாது. இப்படி இருக்கையில் திடீரென ட்ரோனை கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பது ஒரு நிமிடம் ரஷ்யாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த ட்ரோன் தாக்குதலில் சுமார் 450 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்தப்படும்போது இந்த போர்க்கப்பலில் 100 வீரர்கள் வரை இருந்துள்ளனர். இதுவரை உயிரிழப்பு குறித்து எவ்வித அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த கப்பலை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே கருங்கடலில் இருக்கும் தனது கப்பலுக்கான பாதுகாப்பை ரஷ்யா பலப்படுத்தியுள்ளது. மாஸ்கோ நகருக்குள் ட்ரோன் தாக்குதல், தற்போது நாட்டின் பெரிய துறைமுகம் மீது தாக்குதல் என உக்ரைன் உக்கிரமாகியிருப்பது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.