பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது கட்சியினர் கொந்தளித்துள்ள நிலையில் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து அரசியலில் நுழைந்தவர் இம்ரான் கான். இவரது தலைமையில் அந்த அணி உலககோப்பை வென்றது. இதனால் நாடு முழுவதும் இவருக்கு அதிகமான ரசிர்கள் உள்ளனர். இதற்கிடையே தான் இம்ரான் கான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியை தொடங்கி அரசியல் பிரவேசம் செய்தார். மேலும் அவர் பாகிஸ்தான் பிரதமராகவும் பொறுப்பு வகித்தார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு இம்ரான் கானுக்கு ஆதரவு தெரிவித்த எம்பிக்கள் அதனை வாபஸ் பெற்றனர். இதையடுத்து நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார். இதையடுத்து எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தன. புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( பிஎம்எல்-என்) கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் தம்பியாவார்.
இந்த ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இம்ரான் கான் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் முன்வைக்கப்பட்டன. இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது தனது அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள சட்ட விதிகளின்படி அந்நாட்டின் பிரதமராக இருப்பவருக்கு கிடைக்கும் பரிசு பொருட்களை கருவூலத்தில் (தோஷகானா) ஒப்படைக்க வேண்டும். மாறாக அந்த பரிசு பொருளை வைத்து கொள்ள விரும்பினால் அதன் மொத்த விலையில் பாதி தொகையை கருவூலத்துக்கு செலுத்த வேண்டும். ஆனால் இம்ரான் கான் நெக்லஸ் உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் பற்றி கணக்கு காட்டாமல் விற்பனை செய்து கருவூலத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் தான் கருவூல முறைகேடு வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து இம்ரான் கான் உடனடியாக கைது செய்யப்பட்டார். இதன்மூலம் இம்ரான் கானின் சிறையில் அடைக்கப்பட உள்ளார். மேலும் இந்த தீர்ப்பின் மூலம் இம்ரான் கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் அடுத்த 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானை பொறுத்தமட்டில் வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் இம்ரான் கான் செயல்பட்டு வந்த நிலையில் தான் தற்போதைய இந்த தீர்ப்பு அவரையும், அவரது கட்சியினரையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. மேலும் இந்த தீர்ப்பின் பின்னணியில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதாக அவரது கட்சியினர் நினைக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் கட்சி போட்டியிட்டால் வெற்றி பெற்றுவிடும் என்ற அச்சத்தில் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டில் தற்போது ஆளும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் பாகிஸ்தானில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.