பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான். பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், பிரதமராக இருந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரமுகர்களிடமிருந்து பெற்ற பரிசுகளை அரசிடம் ஒப்படைக்காமல் விற்று சொத்து சேர்த்து ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டுமின்றி இம்ரான்கான் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே, இந்த ஊழல் வழக்கு தொடர்பான வழக்கு இஸ்லாமாபாத் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இம்ரான்கான் குற்றவாளி என நேற்று கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து, இம்ரான்கானை போலீசார் வீடுபுகுந்து கைது செய்தனர். அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், வீதிகளில் இறங்கி போராடும்படி ஆதரவாளர்களுக்கு இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார். கைது நடவடிக்கைக்கு முன்னதாக இம்ரான்கான் பேசிய வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இம்ரான்கான் கூறியுள்ளதாவது:-
என் பாகிஸ்தானியர்களே இந்த தகவல் உங்களை அடையும்போது நான் சிறை சென்றிருப்பேன். நீங்கள் வீட்டில் அமைதியாக இருக்கவேண்டாம் என்பதே என் ஒரே வேண்டுகோள். நான் கடினமான சூழ்நிலையை சந்திப்பது எனக்காக அல்ல, உங்களுக்காகத்தான், உங்கள் தலைமுறைக்காத்தான். உங்கள் உரிமைக்காக நீங்கள் போராடாமல் அடிமை வாழ்க்கை வாழ்ந்தால் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் அடிமைகளுக்கு என்று சொந்த வாழ்க்கை இல்லை. அடிமைகள் நிலத்தில் உள்ள எறும்பு போன்றது. அவைகள் அதிக உயரத்தை எட்டாது. இது நீதிக்கான, உங்கள் உரிமைக்கான, சுதந்திரத்திற்கான போராட்டம். சுதந்திரத்தை யாரும் உங்கள் தட்டில் வைக்கமாட்டார்கள். உங்கள் உரிமையை பெறும்வரை நீங்கள் தொடர்ந்து போராடுங்கள், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசு உங்களின் மிகப்பெரிய அடிப்படை உரிமையாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.