விருதுநகரில் பாரத மாதா சிலை அகற்றப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதையொட்டி தமிழக பாஜக தலைவர் பாதயாத்திரையை தொடங்கி உள்ளார். ‛என் மண்.. என் மக்கள்’ என்ற பெயரிலான பாதயாத்திரையை கடந்த மாதம் 28 ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் அண்ணாமலை தொடங்கினார். அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரம் வருகை தந்து அண்ணாமலையின் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இந்த நடைப்பயணம் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரையில் நடந்து முடிந்துள்ளது. இதற்கு அடுத்ததாக விருதுநகர் மாவட்டத்தில் நடைபயணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில், விருதுநகரில் சாத்தூர் சாலை சந்திப்பு அருகே உள்ள கிழக்கு மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் 5 அடி உயரத்தில் பாரத மாதா சிலை வைக்கப்பட்டது. ஆனால் இந்த சிலையை பாஜகவினர் வைக்க யாரிடமும் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பாஜக அலுவலகம் சென்று சிலையை அகற்றும்படி நிர்வாகிகளிடம் கூறினர். அப்போது, சிலையை பாஜக அலுவலகத்தில் தான் வைத்துள்ளோம். இதனால் அனுமதி என்பது தேவையில்லை எனக்கூறி பாரதமாதா சிலையை அகற்ற நிர்வாகிகள் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் பாரத மாதா சிலையின் மீது துணி சுற்றி வருவாய்த்துறை அதிகாரிகள் மறைத்தனர். அதன்பிறகு அந்த சிலையை வருவாய்த்துறையினர் அகற்றி அங்கிருந்து எடுத்து சென்றனர். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரவோடு இரவாக இந்த சம்பவம் நடந்தது விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் விருதுநகரில் பாரத மாதா சிலை அகற்றப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்ட அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த பாரத அன்னையின் சிலையை சுவர் ஏறிக் குதித்து காவல்துறையினர் நேற்று இரவு அப்புறப்படுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சியில், ஒரு கட்சிக்கு சொந்தமான இடத்தில் பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லாத சூழலே நிலவி வருகிறது. ஊழல் திமுக அரசின் அவலங்களை எங்கள் யாத்திரையின் மூலமாக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதால் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அச்சத்தின் உச்சியில் இருப்பதன் வெளிப்பாடே இந்த நடவடிக்கை. பாரத அன்னையின் புகழ் ஓங்குக! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
