ஜம்மு காஷ்மீர் தனிநாடு கோரும் பிரிவினைவாதியான சிறையில் அடைக்கப்பட்டுள்ள யாசின் மாலின் மனைவிக்கு பாகிஸ்தான் இடைக்கால அரசில் ஆலோசகர் என்ற நிலையில் அமைச்சருக்கு இணையான பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் ஒரு தனி தேசிய இனம்; தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் தனிநாடு என விடுதலை பெற வேண்டும் என்பது ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் கொள்கை. இதன் தலைவர் யாசின் மாலின். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால் யாசின் மாலிக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி திகார் சிறையில் யாசின் மாலிக் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் மீதான வழக்குகளில் வீடியோ கான்பரன்ஸில் மட்டுமே ஆஜராகி வந்தார். திடீரென உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றில் யாசின் மாலிக் ஆஜர்படுத்தப்பட்டது பெரும் சர்ச்சையானது. இதனால் சிறைத் துறை அதிகாரிகள் இடைநீக்கமும் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் அமைக்கப்பட்டிருக்கும் இடைக்கால அரசில் யாசின் மாலிக் மனைவிக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இடைக்கால பிரதமர் அன்வருல் ஹக் காகர் ஆலோசகராக முஷால் ஹூசைன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யாசின் மாலிக்கின் மனைவி. இடைக்கால பிரதமரின் ஆலோசகர் என்றாலும் அமைச்சருக்கு இணையான தகுதி பெற்றவர். முஷால் ஹூசைனின் இந்த நியமனம் இப்போது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.