தேர்தல் மோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அமெரிக்காவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு டொன்ல்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஆட்சியில் இருந்தபோது டிரம்ப் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் ஜார்ஜியா மாகாணத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மோசடி செய்ததாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது. இதில் தேர்தல் முடிவுகளை முறைகேடாக மாற்ற முயன்றதாக டிரம்ப் உள்ளிட்ட 18 பேர் மீது மோசடி வழக்கு பதியப்பட்டது. வழக்கு விசாரணை ஜார்ஜியாவின் அட்லாண்டா கோர்ட்டில் நடந்து வருகின்றன. குற்றப்பத்திரிகையில் உள்ள 19 பேரிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த கோர்ட்டு முடிவு செய்தது. எனவே டிரம்ப் உள்பட வழக்கில் தொடர்புடைய 19 பேருக்கும் கைது வாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. அதேசமயம் வருகிற 25-ந் தேதிக்குள் (இன்று) தாமாக முன்வந்து ஆஜராகவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜார்ஜியா தேர்தல் வழக்கு தொடர்பாக அமெரிக்க நேரப்படி 24-ந்தேதி இரவு, 7 மணியளவில் அட்லாண்டா சிறையில் முன்னாள் அதிபர் டொன்ல்டு டிரம்ப் சரணடைந்தார். பலத்த பாதுகாப்புடன் சிறையில் சரணடைந்த நிலையில், சிறை அதிகாரிகள் அவரது அடையாளங்களை குறித்தனர். இதனால் சுமார் 20 நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது. அதன்பின் 2 லட்சம் அமெரிக்க டாலர் பிணையாக செலுத்திய பின், விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்டதும், உடனடியாக விமானம் மூலம் நியூஜெர்சி புறப்பட்டார். இந்த வழக்கில் 25-ந்தேதிக்குள் டிரம்ப் சரணடைய வாய்ப்புள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டிருந்தார். அதேவேளையில், நான் சரணடையப் போகிறேன் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.