எக்ஸ் தளத்தில் வீடியோ, ஆடியோ அழைப்பு வசதி: எலான் மஸ்க் அறிவிப்பு!

எக்ஸ் தளத்தில் கூடிய விரைவில் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி அறிமுகமாக உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினார். டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே பல்வேறு அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் மேற்கொண்டு வந்தார். சமீபத்தில் டுவிட்டரின் லோகோவையும் பெயரையும் மாற்றி அறிவித்தார். அதுமட்டும் இன்றி வருவாயை பெருக்கும் நடவடிக்கையாக புளு டிக் வசதி பெற கட்டணம் செலுத்தும் வசதியையும் அறிமுகம் செய்தார். எக்ஸ் தளம் இனி சூப்பர்-ஆப் ஆக செயல்படும் எலான் மஸ்க் கூறியிருந்தார்.

இந்நிலையில், அதை மெய்ப்பிக்கும் விதமாக தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எக்ஸ் தளத்தில் விரைவில் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகள் வர உள்ளன. ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, மேக் மற்றும் பிசி என அனைத்திலும் இது இயங்கும். இதற்கு தொலைபேசி எண் தேவையில்லை. இது தனித்துவமாக இருக்கும் என மஸ்க் எக்ஸ் தளத்தில் போஸ்ட் செய்துள்ளார். இருந்தாலும் இது எக்ஸ் தளத்தில் சந்தா செலுத்தி வரும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என கூறப்படுகிறது.