மேகதாது திட்டம் குறித்து தமிழ்நாட்டிற்கு புரிய வைக்க முயற்சி: டி.கே.சிவக்குமார்

மேகதாது திட்டம் குறித்து தமிழ்நாட்டிற்கு புரிய வைக்க முயற்சி செய்வோம் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தமிழ்நாடு காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி கேட்டது. இன்றைய சூழ்நிலையில் இந்த அளவுக்கு தண்ணீர் திறப்பது அசாத்தியமானது என்று நமது அதிகாரிகள் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் எடுத்துக் கூறினர். நாங்கள் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறப்பதாக கூறினோம். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட அந்த ஆணையம், வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை திறக்கும்படி உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை ஆணைய முடிவை நாங்கள் மதிக்கிறோம். கர்நாடக அணைகளை நேரில் பார்வையிடுமாறு அந்த ஆணைய அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். நமக்கு(கர்நாடகம்) குடிநீர் பயன்பாட்டிற்கே நீர் இல்லை. அதனால் தமிழகத்தினர் சற்று மென்மையான போக்கை காட்ட வேண்டும். கர்நாடகத்தில் மழை பற்றாக்குறை குறித்து தமிழகத்திற்கு தெரியும். கடந்த ஆண்டு அவர்கள் அதிக நீர் பயன்படுத்தினர். அவர்கள் நீரை எந்த காரணத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து நாம் கேள்வி எழுப்ப முடியாது.

கஷ்டமான காலத்தில் நீரை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இத்தகைய கஷ்டமான நேரத்தில் மேகதாது திட்டமே தீர்வு. இதுகுறித்து நாங்கள் காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிடுவோம். இந்த திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு தான் அதிக லாபம். மேகதாது அணை இருந்திருந்தால் உபரி நீரை தேக்கி வைத்திருக்கலாம். இதுகுறித்து தமிழ்நாட்டிற்கு புரியவைக்க முயற்சி செய்வோம். காவிரி நீர் திறக்கக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அவ்வாறு செய்ய முடியாது. நாம் என்ன செய்தாலும் கோர்ட்டை கவனத்தில் கொள்ள வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 6-ந் தேதி காவிரி வழக்கு விசாரணை நடைபெறுகிறது. பெங்களூரு, மைசூரு நகரங்கள் குடிநீர் தேவைக்கு காவிரி ஆற்றை நம்பியுள்ளன. கர்நாடகத்தின் நலன் காக்க நாங்கள் தயாராக உள்ளோம். சட்டத்தை மதிக்க வேண்டியது முக்கியம்.

டெல்லிக்கு அனைத்துக்கட்சி குழுவை அழைத்துச் செல்வது குறித்து விரைவில் தேதி முடிவு செய்யப்படும். பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ளார். அவர் எங்கள் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களுடனும் தொடர்பு வைத்து கொள்ளட்டும். அதில் என்ன தவறு உள்ளது?. பிரஜ்வல் ரேவண்ணாவின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இது மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை மணி. தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.