சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னமுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தர்மன் சண்முகரத்னம் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். இலங்கையை பூர்விகமாகக் கொண்ட அவர் கடந்த 2001-ம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் அறங்காவலர் வாரிய தலைவராகவும் பதவி வகிக்கிறார். தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் ஆளும் மக்கள் செயல் கட்சியின் ஆதரவு பெற்றவர் ஆவார்.
இந்நிலையில் சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னமுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பக்கத்தில், “சிங்கப்பூரின் புதிய அதிபாராக தேர்வாகியுள்ள தங்களுக்கு என்னுடைய உளம்கனிந்த வாழ்த்துகள். இருநாடுகளின் தூதரக உறவுகளை இன்னும் நெருக்கான அளவில் வலுப்படுத்த தங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடந்த அதிபர் தேர்தலில் தர்மன் அமோக வெற்றி பெற்றார். அவர் 70.4 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தார். 66 வயதாகும் பொருளாதார நிபுணரான தர்மன் சிங்கப்பூரின் 9- வது அதிபராவார்.