ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராயும் குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற முழக்கத்தைக் கடந்த பல வருடங்களாகவே மத்திய பாஜக அரசு வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறையை வரும் 2024ஆம் ஆண்டு முதல் செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது பாஜக அரசு. இதையொட்டி, தேர்தல் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரவும் பாஜக அரசு முயன்று வருகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதில், ‘ஒரே நாடு ஒரு தேர்தல்’ சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
‘ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை மத்திய பாஜக அரசு அமைத்துள்ளது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து இந்த குழு ஆய்வு செய்யும் என மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராயும் குழுவின் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் லோக்சபா குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்தக் குழுவில், 15வது நிதிக்குழு தலைவர் என்.கே.சிங், முன்னாள் லோக்சபா பொதுச் செயலர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் தலைமை விஜிலென்ஸ் ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். சட்டத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்தக் குழுவின் உயர்மட்ட கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா, மாநில சட்டமன்றங்கள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான பரிந்துரைகளை இந்த குழு ஆய்வு செய்து பரிந்துரை செய்யும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு EVM, VVPAT இயந்திரங்கள் போன்றவை உட்பட தேவையான தளவாடங்கள் மற்றும் மனிதவளத்தை இந்த குழு ஆய்வு செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.