இஸ்ரோவின் ராக்கெட் ஏவப்படும் நிகழ்வுகளை வர்ணனை செய்த மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இஸ்ரோவின் வெற்றிக்கு தமிழர்கள் ஆற்றிய பங்களிப்பு மிகப்பெரியது. ஆனால் இதை தமிழர்களுக்கான வெற்றியாக நம்மால் சுருக்கிவிட முடியாது. இவர்கள் ஒட்டுமொத்த தேசத்தின் வெற்றிக்கும், மனித குலத்தின் வெற்றிக்கும் பங்களித்துள்ளனர். அப்படி இருக்கையில் இஸ்ரோவில் ராக்கெட் ஏவுதல் நிகழ்வுகளை வர்ணனை செய்வதிலும் தமிழ்நாட்டை செர்ந்த வளர்மதி கோலோச்சி வந்திருக்கிறார். கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய பல முக்கிய ராக்கெட் நிகழ்வுகளில் வர்ணனையாளராக வளர்மதி பணியாற்றியுள்ளார். கடைசியாக கடந்த ஜூலை 30ஆம் தேதி PSLV C56 ராக்கெட் ஏவப்பட்டதை வளர்மதி அறிவித்தார். இதனையடுத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் ராக்கெட் ஏவப்படும்போது அதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா? என்பதை ராக்கெட் பார்த்து உடனடியாக சொல்ல முடியாது. ராக்கெட் திசை மாறி செல்வதற்கு முன்னறே அதில் பிரச்னை இருப்பது விஞ்ஞானிகளுக்கும், மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கருக்கும் தெரிந்துவிடும. எனவே மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர்தான் பிரச்னை இருந்தால் முதலில் அறிவிப்பார். எனவே இந்த குரல் எப்போதும் வெற்றி குரலா இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் பணி முக்கியமானதாகும். எனவே வளர்மதியின் இழப்பு விஞ்ஞானிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு விண்ணில் RISAT -1 எனும் செயற்கைக்கோள் ஏவப்பட்டது. இந்த திட்டத்தின் திட்ட இயக்குநராக வளர்மதி பணியாற்றியுள்ளார். கடைசியாக சந்திரயான் 3 கவுண்டவுனுக்கும் குரல் கொடுத்துள்ளார். தற்போது விஞ்ஞானிகள் வளர்மதிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.