சனாதனம் ஒழியும் வரை என் குரல் தொடர்ந்து ஒலிக்கும்: உதயநிதி ஸ்டாலின்!

நெல்லையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் ஒழியும் வரை என் குரல் தொடர்ந்து ஒலிக்கும்” என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின், “இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்தச் சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரியமாகும். சனாதனம் சமத்துவதற்கும் சமூகநீதிக்கும் எதிரானது ” எனப் பேசினார்.

உதயநிதி ஸ்டாலின் பேசிய வீடியோவை வெளியிட்ட பா.ஜ.க.வின் தேசிய ஐ.டி. விங் பொறுப்பாளர் அமித் மால்வியா, “இந்தியாவில் சனாதன தர்மத்தை பின்பற்றும் 80% மக்களை ஒழிப்பதற்கு” உதயநிதி அழைப்பு விடுத்ததாக குறிப்பிட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உதயநிதியின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பாஜகவின் மாநிலச் செயலரான ஏ.அஸ்வத்தாமன், உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குத் தொடர அனுமதி கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதினார். டெல்லி காவல்துறையில் வினீத் ஜிண்டால் என்பவர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்தார். அயோத்தியைச் சேர்ந்த சாமியாரான பரமஹன்ஸ ஆச்சார்யா என்பவர், உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை இழிவுபடுத்திவிட்டதால், அவருடைய தலையைக் கொண்டுவருவோருக்கு 10 கோடி ரூபாய் அளிக்கப்படும் என அறிவித்தார்.

எனினும், சனாதானம் குறித்த தன்னுடைய கருத்தில் உறுதியாக இருந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். ஒட்டுமொத்த இந்தியாவே சனாதனம் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறது. இன்னமும் பேச வேண்டும். நான் முன்பே சொன்னது போல் நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது. இன அழிப்புக்கு நான் அழைப்பு விடுத்ததாக சிலர் பேசுகின்றனர். சனாதனம் என்ற கோட்பாட்டை ஒழிக்க வேண்டும் என்று தான் பேசினேன். என்ன வழக்குப் போட்டாலும் சந்திப்போம் எனத் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு சாமியார் அச்சுறுத்தல் விடுத்திருப்பதால் உதயநிதி வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த போலீஸ் பாதுகாப்பெல்லாம் எனக்குத் தேவையே இல்லை, இளைஞரணி தம்பிமார்கள் இருக்கும்போது எனக்கென்ன பயம் என உதயநிதி ஸ்டாலின் நெல்லையில் பேசியுள்ளார்.

நெல்லையில் நேற்று நடந்த திமுக இளைஞரணி நிகழ்ச்சியில் சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

நான் ஒரு மாநாட்டில் பேசியது ஒருநாள் செய்தியாக கடந்து போயிருக்கும். அதை எடுத்து பொய்ச் செய்தி பரப்பி, இப்போது ஒட்டுமொத்த இந்தியாவே அதைப்பற்றித் தான் பேசிக்கொண்டிருக்கிறது. எதையுமே கேள்வி கேட்கக்கூடாது, எல்லாமே நிலையானது என்பதுதான் சனாதனம். ஆனால், எதையும் கேள்வி கேட்போம் என ஆரம்பிக்கப்பட்டதுதான் நமது திமு கழகம். அம்பேத்கர் சொன்னதையே நானும் சொன்னேன். பெரியார் எதற்காகப் போராடினாரோ அதையே பேசினேன். திமுக எதற்காக துவங்கப்பட்டதோ அதற்காகவே நான் குரல் கொடுத்தேன். சனாதனத்தை ஒழிக்கவேண்டும் என்றேன். உடனே பாஜகவினர் பொய்ச் செய்தியைப் பரப்பினர். பாஜகவினர் வாயைத் திறந்தாலே பொய்.

நான் இனப்படுகொலை செய்யச் சொல்லிவிட்டேனாம். பிரதமர் மோடி வறுமையை ஒழிப்பேன் என புரூடா விட்டாரே.. வறுமையை ஒழிப்பது என்றால் ஊரில் இருக்கும் பணக்காரர்களை எல்லாம் அழைத்து கொலை செய்வதா? இந்த அறிவு கூட இல்லாத பாஜக எனது பேச்சைத் திரித்துப் பரப்பியது. அமித்ஷா, நட்டா என இப்போது அதைப் பற்றி பேசாத ஆள் கிடையாது. இதற்கு மேல் நான் பேசப்போவது இல்லை, தமிழ்நாட்டு மக்கள் பேச வேண்டும். நாம் கொள்கையைப் பேசும் கூட்டம். சனாதனம் ஒழியும் வரை என் குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே தான் இருக்கும். நேற்று ஒரு சாமியார், உதயநிதி தலையை சீவினால் ரூ.10 கோடி என அறிவித்தார். என் தலையை சீவுவதற்கு ஏன்ப்பா 10 கோடி? 10 ரூபாய் சீப்பு போதும், நானே சீவிக்கிறேன் என்றேன். சாமியாரிடம் எப்படி 10 கோடி இருக்கும் என நான் கேட்டேன். அதை செய்தியாளர் ஒருவர் அந்த சாமியாரிடம் கேட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு 500 கோடியாம். சாமியாரிடம் 500 கோடி இருக்கிறது. இவரெல்லாம் உண்மையான சாமியாரா? இதுபோன்ற போலி சாமியார்களை அடித்து விரட்டத்தான் சனாதன ஒழிப்பைப் பேசுகிறோம். இந்த 9 ஆண்டுகளில் பாஜக அரசு செய்த சாதனை ஒன்றுமே இல்லை, அவர்கள் செய்வது முழுக்க முழுக்க கலவரத்தைத் தூண்டி விடுவதுதான். இவ்வாறு அவர் கூறினார்.