தமிழக மக்கள் வெறுப்பு அரசியலுக்கு எதிரானவர்கள்: செல்வப்பெருந்தகை

பாஜகவை வீழ்த்துவதே ஒற்றை இலக்கு என்ற ‘இந்தியா’ கூட்டணியின் நடவடிக்கைகளை திசை திருப்புவதற்காக இதுபோன்ற மத அரசியலை பா.ஜ.க.வினர் கையில் எடுத்திருப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பிறப்பினால் அனைவரும் சமம், மக்கள் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும் என்று அய்யன் வள்ளுவர் கூறினார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஸ்ரீமத் பகவத் இராமானுஜர் சமத்துவம், சமதர்மம், சாதி மத பேதமின்மை ஆகிய கொள்கைகளை உபதேசித்து அதை நடைமுறைப்படுத்தியும் காட்டியவர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்தக் கருத்துக்கள் குறித்துதான் பேசினார். திருவள்ளுவர், ஸ்ரீமத் பகவத் இராமானுஜர் ஆகியவர்களை நாங்கள் தான் கொண்டாடுகிறோம் என்று வேஷம் போடும் பாஜகவினர் இன்று அவர்களின் கொள்கைகளுக்கு எதிராக இருப்பது ஏன்? மேலும், சனாதான தர்மமோ பிறப்பால் ஏற்றத்தாழ்வு உண்டு என்று கூறுகின்றது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக வேண்டுமென்றுதான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழுத்தமாகப் பேசினார். அவர் பேசியதில் ஒன்றும் தவறில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பேரன், இதைவிட வேறென்ன பேசமுடியும்.

தமிழ்நாட்டு மக்கள் தீண்டாமை மற்றும் வெறுப்பு அரசியலுக்கு எதிரானவர்கள். அவர்களுக்கு ஆன்மீகத்திற்கும் மத பயங்கரவாதத்திற்கும் உள்ள வேறுபாட்டை நன்றாகப் புரிந்து வைத்துள்ளார்கள். இந்தப் புரிதலை பா.ஜ.க.வினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களில் நம்பிக்கைக் கொண்ட சனாதானவாதிகளிடம் எதிர்பார்க்க முடியாது. சமீபத்தில் எங்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் வெளியிட்ட அதானி குறித்த முறைகேடுகள், மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG of India) வெளியிட்ட மத்திய அரசின் முறைகேடுகள், பா.ஜ.க.வை வீழ்த்துவதே ஒற்றை இலக்கு என்ற ‘இந்தியா’ கூட்டணியின் நடவடிக்கைகளை திசை திருப்புவதற்காக இதுபோன்ற மதஅரசியலை பாஜகவினர் கையில் எடுத்திருக்கின்றனர். இவர்களுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.