இந்த நாடு என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா? என மத்தியில் ஆளும் பாஜகவை திமுக பொதுச் செயலாளரான தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்தார்.
சென்னையில் தி.மு.க சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
சிறுபான்மை பெரும்பான்மை என்பது எல்லாம் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கக் கூடாது. இதயத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டும். இந்த நாடு இந்தியா. இது இந்துக்களின் நாடு அல்ல. இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்குகிற போது இந்துக்கள் மட்டும் அல்ல.. சீக்கியர் பகத்சிங் சாகவில்லையா? கடைசியாக, பாகிஸ்தான் பிரிந்த போது காயிதே மில்லத், அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவராக இருந்தார். அவரை எல்லோரும் கூப்பிட்டார்கள். இந்தியாவுக்கே தலைவராக இருந்தவர் நீங்கள்.. பாகிஸ்தானுக்கு வந்துவிடுங்கள்.. அதே பதவியில் நீங்கள் இருக்கலாம்.. வேறு பதவிக்கு கூட வரலாம். அது நம்முடைய நாடு வாருங்கள் என்று சொன்னார்கள். அப்போது அண்ணல் காயிதே மில்லத் சொன்னார், நான் மதத்தால் இஸ்லாமியன். ஆனா இந்த மண்ணுக்குரிய சொந்தக்காரன். இந்த மண் என்னுடைய மண். இங்கே வீசுகிற காற்று என்னுடைய நாட்டின் காற்று. நான் குடித்தது இந்த நாட்டின் தண்ணீரை.. மத வேறுபாடுடன் நான் வரத் தயாராக இல்லை. இந்தியாவே என் தேசம், நாடு என்று சொன்னாரே.. அந்த விரிந்த மன்ப்பான்மை சிறுபான்மை- பெரும்பான்மையை அழித்துவிடும். அந்த எண்ணம் எல்லோருக்கும் இருக்கனும். பெரும்பான்மையினராக இருப்பவருக்கும் இருக்க வேண்டும். ஆனால் இந்த நாட்டில் என்ன நடக்கிறது? என்ன என்னம்மோ நடக்கிறது இந்த நாட்டில்.. திடீர்னு பார்லிமெண்ட் கூடுகிறது என்கிறார்கள். எதற்காக? என கேட்டால், ஒரே நாடு அப்புறம்.. ஒரே மதம்.. அப்புறம்.. ஒரே மொழி.. அப்புறம் ஒரே ஆட்சி.. ஒரே அதிபர் மோடி.. அடப்பாவிகளா! இந்த நாட்டை ஒருவழியாக முடிச்சுருவீங்களா? இது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? இந்த நாட்டுக்கு ரத்தத்தை சிந்தியவர்கள் எத்தனை பேர்?
ஒருநாள் ஆளுநர் விருந்துக்கு அழைத்தார்.. நாங்கள் சண்டை போட்ட நேரம்.. தலைவரிடம் கேட்டேன்.. மதித்து கூப்பிடுகிறார் போகலாம் என்றார். அந்த விருந்தில், இந்தியாவின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகள் என ஒரு ஆவணப்படம் வெளியிடப்பட்டது. அந்த படத்துல யார் யாரையோ காட்டுகிறார்கள்.. நம்ம ஊரில் இருக்கிற சத்தியமூர்த்தி ஐயரை காட்டுகிறார்கள்.. பாரதியை காட்டினர்.. ஆனால் தேசப் பிதா எனும் இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காந்தியை காட்டவில்லையே.. பண்டித ஜவஹர்லால் நேருவை காட்டவில்லை. ஆனால் பட்டேலை காட்டுகின்றனர்.. அப்படியானால் நாட்டின் சரித்திரத்தை மறைக்கிறார்கள்.
இந்த நாடு யாருடையது? யாருக்கும் சொந்தமல்ல.. கேள்வி கேட்பவர்கள் இந்த மண்ணிலே பிறந்தவர்கள். இந்த மண்ணிலே வாழ்கிறவர்கள். இந்த மண்ணிலே சாகப் போகிறவர்கள். இவர்களை எப்படி நீங்கள் சிறுபான்மை என சொல்லலாம்? திமுக பிடிக்கிறது.. காங்கிரஸ் பிடிக்கிறது.. பாஜகவை பிடிக்கிறது.. அவ்வளவுதான் வேற்றுமை. உனக்கு இந்து மதம், அவனுக்கு கிறிஸ்தவ மதம் பிடிக்கிறது. அவ்வளவுதானே வித்தியாசம். அதற்காக சிறுபான்மையினர் இந்த நாட்டில் இருக்கக் கூடாது என சொல்லக் கூடாது. இந்த நாட்டுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். வெளிநாட்டில் இருந்து புத்த மதத்தில் இருப்பவர் வரலாம். எல்லா மதத்தினரும் வரலாம். ஆனால் இஸ்லாமியரும் இலங்கை தமிழரும் வரக் கூடாது என சட்டத்தைப் போட்டார்கள் அல்லவா? குறுகிய மனப்பான்மை உள்ளவர்களிடம் ஒரு ஆட்சி கிடைத்துவிட்டதால் இன்றைக்கு இந்த நாடு படாதபாடுபடுகிறது.
“இந்தியா” என சொல்வதால் என்ன? நாங்களா இந்தியா என்று சொன்னோம்? அலெக்ஸாண்டர் வந்தார்.. அவர் சொன்னார்.. அதன் பின்னர் வெளிநாட்டவர் அனைவரும் இந்தியா என்றனர். ஆங்கிலேயர் 200 ஆண்டுகள் ஆண்டனர் அவர்கள் இந்தியா என்றனர். காங்கிரஸ் ஆண்டது.. இந்தியா என்றது. நேற்று வரை நீங்களும் இந்தியா என்றுதானே சொன்னீர்கள்? இன்றைக்கு “பாரத்” என்கிறீர்கள். நீங்கள் பெயரை மாற்றுங்கள் தவறு என சொல்லவில்லை. அதனால் என்ன நடக்கப் போகிறது? சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என நாம் பெயர் மாற்றினோம். என்ன காரணத்துக்காக? தமிழர்கள் வாழ்விடம்.. தமிழர் கலாசாரம் இருக்கும் இடம்.. தமிழர் நூல்கள் உருவான இடம்.. அதனால்தான் இந்த நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் வைத்தோம். என்னைப் பொறுத்தவரையில் இந்த நாடு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. இது எங்கே போய் முட்டி நிற்கும் என தெரியவில்லை. ஒருவேளை சட்டமன்றங்களைக் கலைத்துவிட்டு அமெரிக்காவின் அதிபர் போல மோடி வர விரும்புகிறாரா என எனக்கு தெரியாது. இவ்வாறு துரைமுருகன் பேசினார்.