திமுகவின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து நீதிபதி ஆனந்த வெங்கடேசன் விசாரணைக்கு எடுத்துள்ளார்.
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும், திமுகவின் துணை பொதுச் செயலாளர்களில் ஒருவருமாக இருப்பவர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி. கடந்த 2006 – 11 ஆட்சி காலத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராக பதவி வகித்தார். தனது பதவிக்காலத்தின் போது 2008ஆம் ஆண்டு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசனுக்கு ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 2012ஆம் ஆண்டு ஐ.பெரியசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இதனிடையே இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி மனுதாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி ஐ.பெரியசாமியை கடந்த மார்ச் மாதம் விடுவித்தது.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேசன் தாமாக முன்வந்து மறுஆய்வுக்கு எடுத்துள்ளார் . இதேபோல 2001 – 06 வரை சமூக நலத் துறை அமைச்சராக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கையும் மறு ஆய்வுக்கு எடுத்துள்ளார். இந்த இரண்டு வழக்குகளும் இன்று விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளன.
முன்னதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அவரை வேலூர் நீதிமன்றம் விடுவித்தது. அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரும் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தால் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதனிடையே மூவர் மீதான வழக்கையும் தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்தார் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேசன். விசாரணை மிக மோசமான முறையில் நடைபெற்றதாகவும் அதற்கு விளக்கம் அளித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை மட்டும் மறு ஆய்வு செய்வது ஏன் என கேள்வி எழுப்பியதோடு, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கை மறுஆய்வு செய்வது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என இதே நீதிபதிதான் கூறியதாகவும் குற்றம்சாட்டினார். அடுத்த சில நாட்களில் 2011ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கையும் தூசு தட்டி மறுஆய்வுக்கு கொண்டு வந்தார் நீதிபதி.