பல்கலைக் கழக துணைவேந்தர்கள் நியமனம் முதல் தமிழ்நாடு அரசின் செயல்களுக்கு ஆளுநர் ரவி முட்டுக்கட்டை போடுவதா? தமிழ்நாடு அரசும், கல்வியாளர்களும், பொதுநலவாதிகளும் ஆளுநரின் சட்ட விரோதப் போக்கைத் தடுக்க முன்வர வேண்டும் என தி.க. தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டின் ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி அவர்கள், தமிழ்நாட்டிற்கு வந்து பதவியேற்ற நாளிலிருந்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. அரசுக்கு எதிராக ஒரு ‘‘போட்டி அரசினை’’ நடத்துவதும், அரசால் அறிவிக்கப்பட்ட கொள்கைத் திட்டங்களுக்கு (Policy Decision) விரோதமாகவும், பொதுவான மரபு ரீதியான சட்டமன்ற நடவடிக்கைகளிலும் முற்றிலும் இதற்குமுன் எப்போதும் நடைபெறாத வகையில், பேரவையை அவமதிக்கும் வகையிலும், உரையில் உள்ள தலைவர்கள் பெயரை விட்டுவிட்டுப் படித்தல், எதிர்க்கட்சிகளைப் போல் வெளிநடப்பு செய்து, அவையின் மாண்பைக் குலைத்தல், நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவுகளான மசோதாக்களை (Bills) சட்டமாகாதபடி அவற்றை ஆளுநர் மாளிகையிலேயே கிடப்பில் போடுதல், அனுப்பப்பட்ட கோப்புகளை – அரசு அனுப்பிய பதில்களைக் கூட வரவில்லை என்று கூறி, அமைச்சர் விளக்கத்திற்குப் பின்னும் அசையாது சண்டித்தன சவால்களை விடுதல் போன்ற செயல்களை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் செய்து மக்களாட்சியை நடக்கவிடாமல், அரசமைப்புச் சட்ட விரோத காரியத்தில் சளைக்காமல் ஈடுபட்டு வருகிறார். அவர் செல்லுகின்ற ஊர்களில் எல்லாம் இப்படி மக்கள் எதிர்ப்பு – கருப்புக் கொடிகள் காட்டுவது கண்டும் வெட்கமில்லாமல் வீம்புடன் நடந்துகொள்கிறார்.
அண்ணா பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் ‘‘முழக்கமிடுகிறார்’’ – பட்டமளிப்பு விழாக்களுக்கான நடத்தை முறைகள், மரபின் மாண்புகளைக் காற்றில் பறக்கவிட்டு கொச்சைப்படுத்துகிறார்; அதையொட்டி ஒரு துணைவேந்தரும் கோஷம் போடுவது ‘இராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசம். வேந்தர் பதவியில் ஆளுநருக்குப் பதில் மாற்றம் ஏற்படுத்தி, குஜராத், அரியானா மாநிலங்களைப்போல் தமிழ்நாட்டிலும் இருக்க சட்ட மசோதா நிறைவேற்ற விடாது கடந்த ஓராண்டுக்குமேல் கிடப்பில் போட்டு, அழுத்தமாக அதன்மீது உட்கார்ந்து, சட்ட விரோதமான செயல்களை நிறைவேற்றி துணைவேந்தர்கள் நியமனங்களைக் காலதாமதமாக்கியதோடு, சில ஆண்டுகள் துணைவேந்தர்களே இல்லாமல் – தலை இல்லாது பல்கலைக் கழகங்கள் இயங்குவது போன்ற பரிதாப நிலை.
இப்போது பகிரங்கமாகவே அவர் சட்ட விரோதமான ஆணைகளைப் பிறப்பிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளார் – ‘வேலியே பயிரை மேய்வதுபோல். தமிழ்நாட்டின் மூன்று அரசு பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர்களை நியமனம் செய்ய, தேடுதல் குழுக்களை (Search committee) அமைத்து பட்டியலை அரசுக்கு அனுப்பியுள்ளதாக ஆளுநர் அலுவலக செய்திகள் (6.9.2023) கூறுகின்றன. இந்தத் தேடுதல் குழுக்களில், பல்கலைக் கழக மானியக் குழுவின் (U.G.C.) நியமன உறுப்பினர்களாக, பிற மாநில பல்கலைக் கழகங்களின் தற்போதைய மற்றும் மேனாள் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள் நியமனத்தில் விதிகளுக்கு முரணாக ஆளுநர் நடக்கலாமா?
முதலாவது, மூன்று பல்கலைக் கழகங்களுக்கு தேடுதல் குழுக்களை (Search Committee) தமிழ்நாடு அரசு, அந்தந்த பல்கலைக் கழகங்களின் சட்ட விதிகளின்படி (Statute) அமைத்து, அரசின் கெசட்டில் வெளியிட்ட பிறகு (இதற்கும் முன்னதாக ஆளுநரின் அலுவலகங்களிலிருந்து அனுமதி பெறப்பட்டது). அந்தக் குழுவினை திருத்தி அமைத்து, வெளியிடும் அதிகாரம் ஆளுநருக்கு சட்டப்படி கிடையாது. பல்கலைக் கழக சட்ட விதிகளில் அப்படி ஆளுநருக்கு எந்த அதிகாரமும் அளிக்கப்படவில்லை.
மூன்று பல்கலைக் கழகங்கள், 1. சென்னைப் பல்கலைக் கழகம், 2. பாரதியார் பல்கலைக் கழகம், 3. தமிழ்நாடு ஆசிரியர், கல்வியியல் பல்கலைக் கழகம் ஆகிய ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்கும் தனித்தனி சட்ட விதிகள் – துணைவேந்தர் தேர்வு பற்றியது, அச்சட்ட விதிகள் – முற்றிலும் தனித்தனியானவை மட்டுமல்ல – பல்கலைக் கழகச் சுதந்திர உரிமைகளாலும் (Autonomy) பாதுகாப்பானவையும் ஆகும். இப்பல்கலைக் கழகங்களின் தேடுதல் குழுவில், பல்கலைக் கழக மானியக் குழு (U.G.C.) நியமன உறுப்பினர் இதுநாள் வரை இருந்ததில்லை. அதற்கான வாய்ப்பும் பல்கலைக் கழக சட்ட விதிகளில் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.