வடகொரியா தனது கடற்படையை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அணுகுண்டு தாக்குதல் நடத்தும் நீர்மூழ்கி கப்பலை கடற்படையில் இணைத்துள்ளது. கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடற்பரப்பில் இந்த அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் ரோந்து பணியில் ஈடுபடும் என வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ, அது தொடர்பான படங்களையும் வெளியிட்டுள்ளது.
வடகொரியா- தென் கொரியா இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்க படையினர் கொரியா தீபகற்ப பகுதிகளில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தி வருகிறது. உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா இந்த சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் வடகொரியா தனது கடற்படையை பலப்படுத்தும் விதமாக முதல் முறையாக அணுசக்தி தாக்குதல் நடத்தும் நவீன நீர்மூழ்கி கப்பலை தயாரித்து உள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பல் தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
வடகொரிய போர் கதாநாயகனாக அறியப்படும் கிம் குன் அக் என்பவரின் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கி கப்பலின் அறிமுக விழா போங்டே துறைமுகம் அருகே நடைபெற்றது. அதிபர் ஜிம் ஜாங் உன் தலைமையில் நடைபெற்ற விழாவில், முப்படைகளின் தலைவர்கள் மற்றும் வீரர்கள் திரளாக பங்கேற்றனர். அணு ஆயுதங்களை கொண்டு கடற்படையை உறுதியாக்க வேண்டிய தவிர்க்க முடியாத சூழல் வடகொரியாவுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறிய அதிபர் கிம், கடற்படையில் உள்ள கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கிகளில் விரைவில் அணு ஆயுதங்கள் பொருத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். புதிய நீர்மூழ்கி கப்பலில் எவ்விதமான ஏவுகணைகள் இணைக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களை வடகொரியா வெளியிடவில்லை.
சமீபத்தில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவக்கூடிய பல்வேறு ஏவுகணைகளையும் கப்பலில் இருந்து செலுத்தும் ஏவுகணைகளையும் வடகொரியா அடுத்தடுத்து சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணு குண்டு தாக்குதல் நடத்தும் நீர்மூழ்கி கப்பலை வடகொரியா ஜப்பானை நோக்கி கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி இருப்பதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது கடற்படையில் உள்ள நீர்மூழ்கி கப்பல்களை அணு ஆயுதம் தாங்கிய நீர் மூழ்கி கப்பலாக மாற்ற வடகொரியா முடிவு செய்துள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.