1700 கோடி ரூபாய் நிலம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

அரசு கையகப்படுத்த வேண்டிய நிலத்தை முறைகேடான ஆவணங்களை தயாரித்து தன்வசமாக்கியதுடன் அதனை வீட்டு மனைகளாக விற்பனை செய்து 1700 கோடி ரூபாய் அளவிற்கு லாபம் ஈட்டியதாக ஜெகத்ரட்சகன் மீது புகார் உள்ளது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் இயங்கி வந்த குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை 1982 இல், நில நகர்புற உச்சவரம்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு எடுத்திருந்தது. இதற்கிடையில் அரகோணம் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், கடந்த 1995ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் பங்குகளை , தனது அதிகாரத்தின் மூலமாக முறைகேடாக வாங்கியதாகவும், அதேபோல் 170 ஏக்கர் நிலத்தை பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளின் ஒத்துழைப்போடு, போலி ஆவணங்களை தாக்கல் செய்து அபகரித்தார் என்றும், இதன் மூலமாக வீட்டு மனைகளாக அந்த இடத்தை விற்பனை செய்து, சுமார் 1700 கோடி ரூபாய் அளவிற்கு அவர் லாபம் சம்பாதித்திருக்கிறார் என்று டாவ்சன் என்பவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த சூழலில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையிலும் காவல்துறையினர் தீவிரமாக இறங்கி இருந்த நிலையில், வழக்கினை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகத்ரட்சகன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை ரத்து செய்ததோடு, அவர் மீதான நில அபகரிப்பு வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்து கடந்த நவம்பர் மாதம் 2022ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராகவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ஜெகத்ரட்சகன் மீது புகார் அளித்திருந்த டாவ்சன் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ஜெகத்ரட்சகன் மீதான குற்றச்சாட்டு என்பது மிகவும் பெரியது. ஆவண ஆதாரங்கள் அனைத்தும் இருந்தும் கூட, சென்னை உயர்நீதிமன்றம் அதனை கருத்தில் கொள்ள தவறிவிட்டது. அதுமட்டுமல்லாமல் அரசுக்கு சேர வேண்டிய மிகப்பெரிய தொகை, முறைகேடாக கையாடல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உடனே உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். தற்போது உச்ச நீதிமன்றம் விடுமுறையில் இருக்கிறது. எனவே அடுத்த வாரம் உச்ச நீதிமன்றம் வழக்கமான அலுவல்களை தொடங்கியதற்கு பிறகு வழக்கு விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.