17-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு!

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்பாக, இம்மாதம் 17-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த மாதம் 18-ம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முந்தைய நாள் செப்.17-ம் தேதி மாலை 4.30 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட இருக்கிறது. அதற்கான அழைப்பிதழ் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 18 -ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடந்த மாதம் 31-ம் தேதி அறிவித்தார். ஆனால், சிறப்பு கூட்டத்துக்கான நோக்கம் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. ‘நாங்கள் நாடாளுமன்ற கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம். முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன. சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்துக்கான நோக்கம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்’ என்று பிரகலாத் ஜோஷி கூறியிருந்தார்.

சிறப்புக் கூட்டத்துக்கான நோக்கம் குறித்த அரசின் மவுனத்தை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை எம்.பி. டெரிக் ஓ பிரையன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு இடையில் இன்னும் இரண்டு வேலை நாட்களே உள்ளன. ஆனால், சிறப்புக் கூட்டத்துக்கான நோக்கம் குறித்து இன்னும் சொல்லப்படவில்லை. இரண்டு பேருக்கு மட்டுமே அது தெரியும். என்றாலும் நாம் இன்னும் நம்மை நாடாளுமன்ற ஜனநாயகம் உள்ளவர்கள் என்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று செப்.13. நாடாளுமன்றத்தின் சிறப்பு ஐந்து நாள் கூட்டம் தொடங்குவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. ஆனால், ஒருவரைத் தவிர (சரி வேறு சிலரும் அறிந்திருக்கலாம்) வேறு ஒருவருக்கும் சிறப்புக் கூட்டதின் நோக்கம் பற்றி எதுவும் தெரியாது. இதற்கு முன்பு சிறப்புக் கூட்டங்கள் அமர்வுகள் நடத்தப்பட்டபோது, அதன் நிகழ்ச்சி நிரல்கள் முன்னரே அறிவிக்கப்பட்டன” என்று தெரி்வித்து சிறப்புக் கூட்டங்கள் மற்றும் அவற்றின் நோக்கம் ஆகியவற்றைப் பட்டியலிட்டுள்ளார்.

இதனிடையே, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் முதல் நாளில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கும். அதற்கு அடுத்தக் கூட்டங்கள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு மாற்றப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு மாறுவது விநாயக சதூர்த்தி நாளுடன் பொருந்திப் போகிறது. இது பல நிகழ்வுகளுக்கான தொடக்கமாக பார்க்கப்படுகிறது. இந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் பொது சிவில் சட்ட மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல், இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவது போன்ற சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.