ரஷ்யாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு: வட கொரிய அதிபர் கிம்ஜாங்-உன்!

ரஷ்ய அதிபா் விளாதிமீா் புதினை வட கொரிய அதிபா் கிம்ஜாங்-உன் இன்று நேரில் சந்தித்தார்.

அணு ஆயுத சோதனைகளை நடத்தியதன் மூலமும் ஐ.நா. தடையையும் மீறி நீண்ட தொலைவு பாய்ந்து செல்லும் பலிஸ்டிக் வகை ஏவுகணைகளை உருவாக்கி வருவதாகவும் சா்வதேச அளவில் வட கொரியா நீண்ட காலமாகவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், மேற்கத்திய நாடுகளின் எதிா்ப்பையும் மீறி உக்ரைன் மீது படையெடுத்ததன் மூலம் ரஷ்யாவையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சா்வதேச அளவில் தனிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன.

இந்தச் சூழலில், இரு நாடுகளின் அதிபா்களான கிம் ஜாங்-உன்னும், விளாதிமீா் புதினும் நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்காக கிம் ஜாங்-உன் பயணம் மேற்கொண்ட ரயில், செவ்வாய்க்கிழமை ரஷ்யா வந்தடைந்தது.

இந்நிலையில், மாஸ்கோவில் இன்று ரஷிய அதிபரை சந்தித்து கிம் ஜாங்-உன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்தப் பேச்சுவாா்த்தையின்போது, தங்களுக்குத் தேவையான சில பொருளாதார உதவிகளை புதினிடம் கிம் ஜாங்-உன் கோருவாா் என்று கூறப்படுகிறது. முக்கியமாக, உக்ரைன் போரில் ரஷ்யா பயன்படுத்துவதற்கான ஆயுதங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் இந்தப் பயணத்தின்போது மேற்கொள்ளப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. வட கொரியாவிடமிருந்து எறிகணை குண்டுகள், பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகளைக் கொள்முதல் செய்ய ரஷ்யா விரும்புவதாகக் கூறப்படுகிறது.

ரஷ்யாவின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்கு சென்றுள்ளார் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். பரஸ்பர நல்லுறவிற்காக சுமார் 4-லிருந்து 5 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை, நிறைவடைந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ரஷ்யாவின் தென் கிழக்கில் உள்ள ரஷ்யாவின் முக்கிய விண்வெளி மையமான வோஸ்டோச்னி காஸ்மோடிரோம் தளத்தில் வட கொரிய அதிபரை வரவேற்ற புதின், அங்குள்ள பல முக்கிய அம்சங்களை வட கொரிய அதிபருக்கு சுற்றி காண்பித்தார். இதற்கு பிறகு தூதர்கள் அளவிலான சந்திப்புகள் நடைபெற்றது. இருவரின் இந்த தனிப்பட்ட சந்திப்பிற்கு முன்னதாக ரஷ்ய-உக்ரைன் போரை மறைமுகமாக குறிப்பிடும் விதமாக, “ரஷ்யா தனது பாதுகாப்புக்காக மேற்கொண்டு வரும் புனித போரில், அந்நாட்டிற்கு தேவைப்படும் முழுமையான, நிபந்தனையற்ற ஆதரவை வட கொரியா வழங்கும்” என கிம் ஜாங் உன் அறிவித்தார்.

கடந்த ஜூலையில் வடகொரியா சென்ற ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் வெடி மருந்துகளை அனுப்புமாறு கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தன. தற்பொழுது வடகொரியாவிடம் அதிகளவில் வெடிமருந்தை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் புதின் கிம் ஜாங் உன் ஆகியோர் கையெழுத்திடலாம் என்று தெரிகிறது. பதிலுக்கு உணவு பொருள்கள், ஆற்றல், அதி நவீன ஆயுத தொழில்நுட்பங்களை வடகொரியா எதிர்பார்க்கலாம் தெரிகிறது. விமானத்தில் சென்றால் எளிதில் சுட்டு வீழ்த்தப்படும் அபாயம் இருப்பதால் வடகொரிய அதிபர் கிம் ரயிலில் சென்றதாக கூறப்படுகிறது.