‘பயிர் காப்பீடு திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இதற்காக மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்’ என உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
தஞ்சாவூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஜீவகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டம் என்ற பெயரில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்துக்கான 1.50 முதல் 5 சதவீத தொகையை விவசாயிகளும், எஞ்சிய தொகையை மத்திய, மாநில அரசுகள் சமமாகவும் வழங்குகின்றன. டெல்டா பகுதியில் குறுவை பருவத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரிலும், சம்பா பருவத்தில் 13 லட்சம் ஏக்கரிலும் சாகுபடி நடைபெறும். தஞ்சாவூர் மாவட்டம் குறுவை பருவத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெறும். ஆண்டு தோறும் குறுவை, சம்பா சாகுபடியின் போது பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படவில்லை. பல மாநிலங்களில் மத்திய அரசின் நிதியுதவியுடன் குறுவை சாகுபடி காலத்துக்கும் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படாதால் மத்திய அரசின் சலுகைகள் கிடைக்கவில்லை. பேரிடர் மேலாண்மை திட்டத்தில் ஏக்கருக்கு 5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் மட்டுமே கிடைக்கும் பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை கிடைக்கும். குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறுகின்றனர். விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு பயிர் காப்பீடு திட்டமும் செயல்படுத்தப்படாதால் விவசாயிகளால் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு காவிரியில் கடை மடை வரை தண்ணீர் செல்லவில்லை. இதனால் பயிர்கள் வாடி போயுள்ளன. பயிர் காப்பீடு செய்யப்படாததால் விவசாயிகள் உரிய நிவாரணம் கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்தாண்டு கர்நாடகாவில் மழை குறைவாக உள்ளது. இதனால் டெல்டா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆண்டு முழுவதும் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.கணபதி சுப்பிரமணியன் வாதிட்டார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்வதற்கான இணையதளம் செயல்படவில்லை. பயிர் காப்பீடு திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார் என்றார்.
பின்னர் நீதிபதிகள், ஒரு திட்டத்தை அறிவித்துவிட்டு, அதை முறையாக செயல்படுத்துவதில்லை. பயிர் காப்பீடு திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த வேண்டும். ஒரு திட்டத்தில் சேர பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தால் எவ்வாறு பயனடைய முடியும். காப்பீடு நிறுவனங்கள் வணிக நிறுவனங்களைப் போல் செயல்படுகின்றன. பயிர் காப்பீடு திட்டம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை செப். 20-க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.