டெங்கு காய்ச்சலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுத்துள்ளோம்: மா சுப்பிரமணியன்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் டெங்கு தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின்னர் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், டெங்கு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 8ஆம் தேதியில் இருந்து 14 ஆம் தேதி வரை சுமார் 120 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு என தனியாக வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் டெங்கு பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சென்னையில் டெங்கு தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் மக்கள் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்துகொண்டார். ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் மா சுப்பிரமணியன் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்திற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நோய் பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டு எடுப்பதற்கும், கொசு உற்பத்தியை தடுப்பதற்குமான நடவடிக்கைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மக்கள் நல்வாழ்வுத்துறையும், ஊரக வளர்ச்சி துறையும், நகர்ப்புற உள்ளாட்சி துறையும், இந்த 3 துறையின் செயலாளர்களும், மாவட்ட அளவிலான அலுவலர்களும் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் டெங்கு, மலேரியா பரவாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது. எனவே செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

டெங்கு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம். டெங்கு பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், டெங்கு குறித்து மக்கள் பயப்பட வேண்டாம். கொசு ஒழிப்புக்கான மருந்துகள் அனைத்தும் போதிய அளவில் இருப்பு உள்ளது. டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கேரளாவில் நிஃபா வைரஸ் பரவல் இருப்பதால் எல்லைகள் கண்காணிப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. திருவாரூரில் உயிரிழந்த பயிற்சி பெண் மருத்துவருக்கு டெங்கு, மலேரியா காய்ச்சல் பாதிப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.