பெண்களுக்கு அரசியல் கட்சிகள் ‘சீட்’ கொடுப்பது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.
மாநிலங்களவையில் நேற்று பிரதமர் மோடி முன்னிலையில், எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். அப்போது, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கே அனைத்து கட்சிகளும் தேர்தலில் ‘சீட்’ கொடுப்பதாகவும், அப்பெண்களால் உறுதியாக செயல்பட முடியாது என்றும் அவர் கூறினார். அதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் எழுந்து பேசியதாவது:-
எல்லா கட்சிகளும் உறுதியான பெண் வேட்பாளர்களை தேர்வு செய்வதில்லை என்று கார்கே கூறுவதை ஏற்க முடியாது. எங்கள் கட்சியின் அனைத்து பெண்கள் சார்பில் நான் பேசுகிறேன். எங்களுக்கு பிரதமர் மோடி அதிகாரம் அளித்துள்ளார். திரவுபதி முர்மு யார்? ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஒரு அதிகாரம் அளிக்கப்பட்ட பெண். எங்கள் கட்சியின் ஒவ்வொரு பெண் எம்.பி.யும் அதிகாரம் அளிக்கப்பட்டவர்தான். எனவே, பெண்களை இழிவுபடுத்தக்கூடாது என்று அவர் பேசினார்.
அதற்கு மல்லிகார்ஜுன கார்கே, ”உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின பெண்களுக்கு கிடைக்கவில்லை” என்று கூறினார்.
மறுபடியும் ஆட்சேபனை தெரிவித்த நிர்மலா சீதாராமன், ”திரவுபதி முர்மு யார்? பெண்களுக்கிடையே பாகுபாடு பார்க்காதீர்கள். அனைத்து பெண்களுக்கும்தான் இடஒதுக்கீடு கேட்கிறோம்” என்று கூறினார்.
சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தலையிட்ட பிறகு, கார்கே வேறு பிரச்சினை குறித்து பேச ஆரம்பித்தார். அரசுகள் கவிழ்ப்பு மோடி ஆட்சியில் கூட்டாட்சி முறை பலவீனம் அடைந்ததாக கார்கே பேசியபோது, பா.ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சிகள் ஆண்ட மராட்டியம், கர்நாடகா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களின் அரசுகளை மத்திய அரசு கவிழ்த்ததாக கார்கே பேசியதற்கும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். கார்கே தொடர்ந்து பேசுகையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. நிலுவையை கொடுக்க மத்திய அரசு தாமதம் செய்வதாக குற்றம் சாட்டினார்.
அதற்கு நிர்மலா சீதாராமன் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசியதாவது:-
கார்கே சொல்வது முற்றிலும் தவறு. கடன் வாங்கிக்கூட எனது அமைச்சகம் மாநிலங்களுக்கு பணம் கொடுத்தள்ளது. 3 தடவை முன்கூட்டியே பணம் கொடுத்துள்ளோம். எந்த மாநிலத்துக்கும் ஜி.எஸ்.டி. நிலுவை இல்லை என்று அவர் பேசினார். கார்கே பேசி முடித்தவுடன், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.