கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் உரிமை பாஜக தலைமைக்குத்தான் இருக்கிறது: வானதி சீனிவாசன்

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பெண் பத்திரிகையாளருக்கு ஜிலேபி கொடுத்தார் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன்.

அதிமுக- பாஜக கூட்டணியில் அவ்வப்போது சிறிய சிறிய உரசல்கள் இருந்து வந்தாலும் இரு தரப்பினருமே ஓரளவுக்கு சகித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் எப்போது அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி சிறை சென்ற குற்றவாளி என விமர்சித்தாரோ அன்று முதல் பாஜக மீது அதிமுக தொண்டர்கள் கடும் கொந்தளிப்பில் இருந்து வந்தனர். இதற்கு முத்தாய்ப்பாக அண்மையில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை குறித்தும் அண்ணாமலை பேசியிருந்தார். இது ஏற்கெனவே எரியும் நெருப்பில் நெய் ஊற்றுவது போல் இருந்தது. இந்த நிலையில்தான் அதிமுக நிர்வாகிகள் பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் அதிமுக- பாஜக இடையே தற்போது கூட்டணி இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்திருந்தார். இது தன்னுடைய கருத்து அல்ல என்றும் கட்சியை முடிவைத்தான் தான் அறிவித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

அண்ணாமலை முதலில் ஜெயலலிதா குறித்து பேசினார். அப்போதே நாங்கள் பாஜக தலைமையிடம் முறையிட்டோம். அவர்களும் அண்ணாமலையை அடக்கி வைப்பார்கள் என நினைத்தோம். ஆனால் அவர்களுடைய ஆசியுடன் அண்ணாமலை கடுமையாக பேசி வருகிறார். உண்மைக்கு புறம்பாக தற்போது அண்ணா துரை குறித்தும் விமர்சனம் செய்திருந்தார். இப்படி எங்கள் முன்னோடிகளை இவர் பேசிக் கொண்டே இருந்தால் என்ன அர்த்தம் என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் ஜெயக்குமார் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் பதிலுக்கு பாஜக நிர்வாகிகளும் விமர்சனம் செய்திருந்தனர். அதிமுக குறித்து யாரும் எதையும் பேச வேண்டாம் என பாஜக தலைமை கூறியதாகவும் அதிமுகவுடன் சுமூகமாக கூட்டணியை தொடர பேச்சுவார்த்தை நடத்துமாறும் அண்ணாமலையிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பாஜக- அதிமுக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் நாம் வரலாற்று சிறப்பு மிக்க பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றப்பட்ட மிக முக்கியமான நாள். இதை பற்றி பேசலாம். பாஜக- அதிமுக கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் உரிமை பாஜக தலைமைக்குத்தான் இருக்கிறது. அவர்கள்தான் கூட்டணியை தொடர்வதா, வேண்டாமா, கூட்டணியில் யார் யார் இருப்பார்கள் உள்ளிட்டவை குறிதது முடிவெடுத்து உரிய நேரத்தில் அறிவிப்பார்கள். இதுதான் என்னுடைய பதில். இதை தவிர வேறு எந்த பதிலும் உங்களுக்கு கிடைக்காது. இதற்கு மேல் நான் எந்த வார்த்தையும் சொல்ல விரும்பவில்லை என்றார்.

ஆனாலும் அவரை விடாத செய்தியாளர்கள் பாஜக – அதிமுக கூட்டணி முறிவுக்கு பல இடங்களில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்களே என கேட்டனர். அப்போதும் வானதி கூட்டணி குறித்து தேசிய பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என கூறி அங்கிருந்து நகர முயன்றார். அப்போது மீண்டும் அதே கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு வானதி சீனிவாசன் ஒரு பெண் பத்திரிகையாளரை அழைத்து இங்க வாங்கம்மா ஸ்வீட் எடுங்க. முதல்ல ஜிலேபி சாப்பிடுங்க என கூறி அவருக்கு ஸ்வீட் கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.