காவிரியில் தமிழகத்துக்கு 15 நாட்கள் தலா 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைக்கோரியும், மேகதாது அணைக்கும் அனுமதி வழங்க கோரியும் கர்நாடகா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
மேகதாதுவில் அணை கட்டுவது தான் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் பிரச்சனை உள்ளது. இந்நிலையில் தான் உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரியில் கர்நாடகா நீர் திறந்து விடவில்லை. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
இத்தகைய சூழலில் தான் நேற்று கர்நாடகா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டுக்கு காவிரியில் 15 நாட்கள் தலா 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கர்நாடகா அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை எனக்கூறி நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தான் நேற்று முன்தினம் மீண்டும் 15 நாட்கள் கர்நாடகா தலா 5 ஆயிரம் கனஅடி நீரை தமிழகத்துக்கு வழங்க உத்தரவிட்டது. மேலும் கர்நாடகாவில் மழை என்பது போதிய அளவு இல்லை. கர்நாடகா மக்களின் பயன்பாட்டுக்கும் போதிய அளவில் தண்ணீர் இல்லை. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது என்பது சாத்தியமானதாக இல்லை. இதனால் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும் காவிரி நீர் பங்கீட்டு விஷயத்தில் மத்திய அரசை தலையீட்டு சுமூக முடிவுக்கு வழிவகுக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகா சார்பில் தமிழகத்துக்கு 108.4 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் தற்போது 39.8 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்பது கர்நாடகா அணைகளில் தண்ணீர் இல்லாதது தான். இதனால் நாங்கள் நெருக்கடி நிலையில் இருக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு என்பது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இதற்கிடையே தான் டெல்லியில் அனைத்து கட்சி எம்பிக்களுடன் கர்நாடகா முதல்வர் சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் காவிரி பிரச்சனையை தீர்க்க மேகாதாதுவில் அணை கட்டுவது அவசியமான ஒன்றாகும். இதன்மூலம் தண்ணீர் சேமித்து வைத்து பயன்படுத்த முடியும். அதோடு மின்உற்பத்தியும் செய்ய முடியும். காவிரிக்கு குறுக்கே அணை கட்ட கர்நாடகாவுக்கு முழு உரிமை உள்ளது. அதோடு காவிரி பிரச்சனைக்கு மேகதாது அணை தான் தீர்வாக இருக்கும். இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு 2 முறை கடிதம் எழதப்பட்டுள்ளது. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமர் மோடியை சந்திக்கவும் நேரம் கேட்கப்பட்டுள்ளது. அதோடு நீர் பிரச்சனைக்கு எதிர்காலத்தில் தீர்வு காண வேண்டிய செயல்பாடுகள் குறித்து விஞ்ஞானிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது” என்றார்.